பொங்கல் பரிசு தொகையால் ஓட்டுக்கள் மதிப்பு கூடுகிறது: சொல்கிறார் சீமான்
பொங்கல் பரிசு தொகையால் ஓட்டுக்கள் மதிப்பு கூடுகிறது: சொல்கிறார் சீமான்
ADDED : டிச 26, 2025 02:51 AM

சிவகங்கை: ''பொங்கல் பரிசு தொகை ரூ.3 ஆயிரம் கொடுக்கும் பட்சத்தில் வாக்காளர் ஓட்டுக்களின் மதிப்பு தான் கூடிக் கொண்டே செல்கிறது,'' என, சிவகங்கையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்.,) பணியை தொடர்ந்து எதிர்த்தோம்.
மொத்த வாக்காளர்களையும் பாதிக்க செய்வது போல் இருந்தது இப்பணி. இப்பணியை முறையாக செய்ய ஆறு மாதங்கள் அவகாசம் தந்திருக்க வேண்டும். ஜனநாயக நாட்டில் மக்களுக்கு இருக்கும் ஒரே உரிமை ஓட்டுரிமை மட்டுமே. அந்த ஓட்டை காப்பாற்ற போராட வேண்டி இருப்பதால் இது ஜனநாயக நாடா என்ற கேள்வி எழுகிறது.
அன்றைக்கு வாக்காளர்கள் தான் ஆட்சியாளர்களை தேர்வு செய்தனர். ஆனால் இன்றைக்கு ஆட்சியாளர்கள் தான் வாக்காளர்களை முடிவு செய்கின்றனர். பணம் கொடுத்தால் தான் ஓட்டு போடவே வருகிறார்கள்.
திருப்பரங்குன்றம் மலை தொடர்பான பிரச்னையில் அரசின் நடவடிக்கை சரியில்லை என்று தான் சொல்வேன். இரண்டு சமய வழிபாட்டிற்கும் தடையின்றி மத நல்லிணக்க குழு அமைத்து தீர்வு கண்டிருக்க வேண்டும். அரசியல் கட்சிகளின் லாபத்திற்காக முருகன் மீது பாசம் வந்துள்ளது.
வேலை உறுதி திட்டத்தை ஏற்கவில்லை. உழைக்கும் மக்களை சும்மா உட்கார வைப்பதால் விவசாயம் பாதிக்கப்படுகிறது. இத்திட்டத்தால் எத்தனை மரக்கன்றுகள் நட்டுள்ளீர்கள், துார்வாரிய குளங்கள் எத்தனை என தமிழக அரசு தான் கூற வேண்டும். உழைக்காமல் இருப்பதும் ஒரு வகை திருட்டு தான் என மகாத்மாகாந்தியே கூறியுள்ளார்.
பிப்., 21 ல் நடக்கும் மாநில மாநாட்டில் 234 தொகுதி வேட்பாளர்களையும் அறிமுகம் செய்வோம். தேர்தல் வரும் நிலையில் பொங்கல் பரிசு தொகை ரூ.5 ஆயிரம் தர வேண்டும் என அ.தி.மு.க., பொது செயலாளர் பழனிசாமி தற்போது தெரிவிக்கிறார்.
ஆனால் அவரது ஆட்சியில் ரூ.2,500 தான் கொடுத்தார். அப்போது எதிர்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் ரூ.5 ஆயிரம் கொடுங்கள் என்றார்.
தற்போது பொங்கல் பரிசு தொகை ரூ.3 ஆயிரம் கொடுக்க உள்ளதாக தெரிகிறது. அதை வைத்து பார்த்தால் ஓட்டுக்களின் மதிப்பு தான் கூடிக்கொண்டு போகிறது என்றார்.

