விதிகளை மதிக்காத கோரமண்டல் நிறுவனம்; மாசு கட்டுப்பாட்டு வாரியம் கண்டிப்பு
விதிகளை மதிக்காத கோரமண்டல் நிறுவனம்; மாசு கட்டுப்பாட்டு வாரியம் கண்டிப்பு
ADDED : பிப் 07, 2024 04:35 AM

சென்னை: 'விதிகளை மதிக்காமல் அமோனியா வாயு கசிவுக்கு காரணமாகும் நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்க முடியாது' என, தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
சென்னை, எண்ணுார், பெரியகுப்பத்தில் உள்ள, கோரமண்டல் உர ஆலையில், கடந்த டிச., 26 நள்ளிரவு அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது.
இதனால், அப்பகுதியில் வசித்தவர்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். மூச்சுத்திணறல் உள்ளிட்ட உடல்நல பிரச்னைகள் ஏற்பட்டதால் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இது தொடர்பாக, பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கு பதிந்து விசாரித்தது. சம்பவம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவிட்டது.
நேற்று இவ்வழக்கு தீர்ப்பாயத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மாசு கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் தெரிவித்ததாவது:
அமோனியா கசிவு குறித்து ஆய்வு செய்ய சென்னை ஐ.ஐ.டி., நீரி, மாசு கட்டுப்பாட்டு வாரியம், சி.பி.சி.எல்., நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டது. கடந்த 25 ஆண்டுகளாக ஒரே குழாயில் அமோனியா கொண்டு சென்றதே கசிவுக்கு காரணம் என, முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
எண்ணுாரில் கோரமண்டல் தவிர வேறு அமோனியா ஆலைகள் இல்லை. ஆனாலும், விபத்துக்கான பொறுப்பை ஏற்க கோரமண்டல் மறுக்கிறது. போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை கோரமண்டல் உர ஆலை செய்ய தவறியதே அமோனியா கசிவு விபத்திற்கு காரணம்.
இதுபோன்ற விதிகளை மதிக்காத நிறுவனங்களை தமிழகத்தில் இனி செயல்பட அனுமதிக்க முடியாது.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
கோரமண்டல் நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறியதாவது:
கோரமண்டல் நிறுவனம் 1996 முதல் செயல்பட்டு வருகிறது. இதுவரை விபத்து நடக்கவில்லை. பாதுகாப்புக்காக 35 தானியங்கி கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன.
150 ஆபத்து ஒலி எழுப்பான்களும் பொருத்தப்பட்டுள்ளன. மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கைக்கு பதிலளிக்க அவகாசம் வேண்டும்.
இவ்வாறு அவர் வாதிட்டார்.
அதைத் தொடர்ந்து தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர்குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் அடங்கிய அமர்வு, 'விபத்து நடந்தபோது நிறுவனத்திற்கு வெளியே தானியங்கி செயலிழப்பு கருவிகள் இல்லையா, விதிகளின்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லையா என்பது குறித்து கோரமண்டல் நிறுவனம் விளக்க அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும் மார்ச் 5க்கு தள்ளிவைத்தனர்.

