ADDED : ஆக 24, 2025 01:16 PM

சென்னை: தமிழக பா.ஜ., செய்தி
தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்ட அறிக்கை: நடிகர் விஜய் அரசியல்
நடிகராக இல்லாமல், மக்கள் நல அரசியல்வாதியாக மாற வேண்டும். நடிகர் விஜய்
அதிகார அரசியலுக்காக, சினிமா விளம்பர பாதையில், முதல்வர் நாற்காலி
போதையில், முழு நேர அரசியல் நடிகராக செயல்பட்டு வருவது தமிழக மக்களை
ஏமாற்றும் விதத்தில் உள்ளது. விக்கிரவாண்டியை தொடர்ந்து, மதுரையில் நடந்த
தமிழக வெற்றிக் கழக மாநாட்டிலும் விஜயின் வீர வசனங்கள் அடங்கிய உரை ஒரு
அரசியல் திரைப்படத்தை பார்ப்பது போலவே இருந்தது.
விஜய் போன்ற இளைய
தலைமுறையினர் மக்களிடம் செல்வாக்கு பெற்ற நடிகர்கள், அரசியலுக்கு வருவது
வரவேற்கத்தக்கது. அந்த அடிப்படையில் விஜயை பா.ஜ., வரவேற்றது. ஆனால் மதுரை
மாநாட்டு பேச்சின் மூலம் தேர்தல் அரசியலுக்காகவும் ஓட்டு வங்கிக்காகவும்
சொல்லுக்கும் செயலுக்கும் சம்பந்தமில்லாத வகையில், கொள்கை கோட்பாடு
இல்லாமல், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானின் மறு உருவமாக, அரசியல் நடிகர்
ஜோசப் விஜய் விளங்கி வருகிறார் என்பது மட்டும் தற்போது வெட்ட
வெளிச்சமாகியுள்ளது.
நடிகர் விஜய், தன்னை தமிழக முதல்வராக அடையாளம்
காட்டிக் கொள்வதற்கு கட்டமைக்கப்பட்ட விளம்பரம், மாநாட்டு மேடை, என
மாநாட்டின் பிரம்மாண்டத்திற்கு காட்டி வரும் அக்கறையை மக்கள் விரோத தீய
சக்தி திமுக அரசால் மக்கள் பாதிக்கப்படும்போது, அவர்களுக்காக குரல்
கொடுக்காதது ஏன்?
திடீர் முதல்வர்
விஜய் முதலில் அரசியலில்
நடிப்பதை விட்டுவிட்டு மக்களின் பிரச்னைகளை திமுக அரசின் தவறுகளை, அனைத்து
துறையிலும் நடக்கும் அதி பயங்கர ஊழல்களை, பொய் வாக்குறுதிகளை, சீரழிந்து
வரும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை, விலைவாசி உயர்வுகளை உணர்ந்து, முதல்வர்
ஸ்டாலினின் அலங்கோலக் கொடூர அராஜக ஆட்சியில் மக்கள் படும் திண்டாட்டங்களை,
பிரச்னைகளையும், புரிந்து கொண்டு, தவறுகளை தட்டிக் கேட்கும் வகையில், தமிழக
மக்களின் நலன் காக்கும் அரசியல்வாதியாக தமிழக மக்களின் உரிமைகளை
நிலைநாட்டு வகையில் அரசியல் நிலைபாடுகளை எடுக்க வேண்டும்.
நடிகர்
விஜய் கட்சி ஆரம்பித்து ஒன்றரை வருடத்தில் திடீர் முதல்வராக கற்பனை செய்து
கொண்டு அரசியல் தராதரம் இல்லாமல், முதிர்ச்சியற்ற வகையில் மிஷனரி வார் ரூம்
எழுதிக் கொடுத்த வசனத்தை ஏகத்தாளமாக பேசும் போக்கு கண்டிக்கத்தக்கது.
பிரதமர் நரேந்திர மோடியை 'மிஸ்டர் பி.எம்' என்றும் தமிழக முதல்வர் ஸ்டாலினை
'அங்கிள்' என்றும் வாய்க்கு வந்தபடி வரைமுறை இல்லாமல் மற்றவர்களை தரம்
தாழ்த்தி பேசுவதை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்.
பொய்க் கணக்கு பலிக்காது
நடிகர்
விஜய் நடித்த திரைப்படங்களின் ரிலீஸ் வெற்றிகரமாக நடக்க மண்டியிட்ட
வரலாறுகளை மறக்க முடியுமா? இன்று ஏதோ மக்களின் பிரச்னைகளை தீர்க்க வந்த
மாமனிதராக உங்களை முன்னிறுத்திக் கொண்டு மக்களை காக்க வந்த ரட்சகர் போல
வேஷம் போடுவதை மறுக்க முடியுமா? விஜய் சிறுவயதில் நடிகராக வேண்டும் என்று
அவரின் பெற்றோர் ஆசைப்பட்டனர். நல்ல நடிகராக வெற்றி பெற்று விட்டார். ஆனால்
இன்னும் நீங்கள் நல்ல மக்கள் அரசியல்வாதியாக மாறவில்லை உணர்ந்து
கொள்ளுங்கள். பெற்றோரின் முதல்வர் கனவுக்காக, வெளிநாட்டு மிஷனரிகளின்
பிரிவினைவாத மதவாத அரசியலுக்காக, அவரின் சுயநல அரசியலுக்காக, ஏழை அப்பாவி
இளைஞர்களை, சிறுபான்மை மக்களை ஏமாற்றி தமிழக முதல்வர் ஆகிவிடலாம் என்கிற
உங்களின் பொய்க் கணக்கு பலிக்காது.
வெளிநாட்டு மிஷனரி திருப்தி
செய்து வருமான அரசியலுக்காக நாடகம் நடத்துவதை விட்டுவிட்டு, தமிழக வெற்றி
கழகத்தையும், அதை நம்பி வந்த லட்சக்கணக்கான இளைஞர்களையும் நல்வழிப்
பாதையில் செயல்பட வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.