'வார விடுமுறை பற்றி தெரியாது': நீதிபதி கேள்விக்கு போலீஸ்காரர் பதில்
'வார விடுமுறை பற்றி தெரியாது': நீதிபதி கேள்விக்கு போலீஸ்காரர் பதில்
ADDED : ஏப் 24, 2025 05:50 AM

மதுரை : போலீசாருக்கு வார விடுமுறையை கட்டாயமாக்கும்படி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தொடர்ந்த வழக்கு விசாரணையின்போது, நீதிமன்ற வளாகத்தில் இருந்த போலீசாரை அழைத்து, 'வார விடுமுறை அளிக்கப்படுகிறதா?' என நீதிபதி உடனடி விசாரணை மேற்கொண்டார்.
மதுரை, ஆஸ்டின்பட்டி போலீஸ் ஏட்டு செந்தில்குமார் தாக்கல் செய்த மனு:
பணியின் போது போலீசார் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர். வாரத்தில் ஏழு நாட்களும், 24 மணி நேரமும் பணி செய்ய வேண்டியுள்ளது. இதனால் குடும்பத்தினருடன் நேரம் செலவிட முடியவில்லை. உடல், மன ரீதியாக பாதிக்கப்படுகிறோம்.
போலீசாருக்கு வார விடுமுறை அளிக்க, தமிழக அரசு, 2021ல் வெளியிட்ட அரசாணை, தற்போது வரை நடைமுறைக்கு வரவில்லை. எனக்கு பலமுறை வார விடுமுறை மறுக்கப்பட்டது. இதுபோன்ற பிரச்னையை போலீசாரில் பலர் எதிர்கொள்கின்றனர். உரிமைகள் தொடர்பாக உயரதிகாரிகளிடம் கேட்டால் பழிவாங்கப்படுவோம். அரசாணையை முறையாக அமல்படுத்தி, போலீசாருக்கு வாரவிடுமுறை அளிப்பதை கட்டாயமாக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு, நீதிபதி பட்டுதேவானந்த் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அவர், நீதிமன்ற அறையில், பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்த ஒரு போலீஸ்காரரை வரவழைத்து, 'வார விடுமுறை அளிக்கப்படுகிறதா?' என, கேள்வி எழுப்பினார்.
அந்த போலீஸ்காரர், 'நான் ஒரு உயர் அதிகாரியின் கார் டிரைவராக இங்கு வந்துள்ளேன். வார விடுமுறை பற்றி தெரியாது' என்றார். நீதிமன்ற வளாகத்திலிருந்து மற்றொரு போலீஸ்காரரை வரவழைத்த நீதிபதி, 'வார விடுமுறை அளிக்கப்படுகிறதா?' என, கேள்வி எழுப்ப, அவர், 'உயர்நீதிமன்ற பாதுகாப்பு பணியில் உள்ளேன். நீதிமன்றம் சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் எனக்கு வார விடுமுறை அளிக்கப்படுகிறது' என்றார். நீதிபதி தீர்ப்பை ஒத்திவைத்தார்.

