ADDED : டிச 12, 2025 10:25 PM

புதுக்கோட்டை : புகார் கொடுத்த நபருக்கு சி.எஸ்.ஆர்., பதிவு செய்ததற்காக, 10,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய எஸ்.ஐ.,யை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், பெருங்களுர் அருகே பன்னிரான்டாம்பட்டியை சேர்ந்தவர் வீரமணி, 47; விவசாயி. இவர், அதே கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மற்றும் முத்துராஜா மனைவி முத்துலட்சுமி ஆகியோர் மீது, இடப்பிரச்னை தொடர்பாக, ஆதனக்கோட்டை போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்து இருந்தார்.விசாரித்த ஆதனக்கோட்டை போலீஸ் எஸ்.ஐ., சங்கர், இடப்பிரச்னை காரணமாக, சிவில் நீதிமன்றத்தில் நாடி தீர்த்து கொள்ளுமாறு கூறி, எழுத்து மூலமாக இருதரப்பினரும் எழுதி வாங்கி கொண்டு சி.எஸ்.ஆர்., பதிவு செய்து, கொடுத்துள்ளார்.
பின்னர், எஸ்.ஐ., சங்கர், புகார்தாரர் வீரமணியிடம் சி.எஸ்.ஆர். பதிவு செய்து கொடுத்ததற்காக, 10,000 ரூபாய் லஞ்சம் கேட்டு வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதில், அதிருப்தியடைந்த வீரமணி, புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். தொடர்ந்து, லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., ராதாகிருஷ்ணன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஜவகர் மற்றும் போலீசார், வீரமணியிடம், எஸ்.ஐ.,சங்கர் பணம் வாங்கிய போது, கைது செய்தனர்.

