'பிரஸ் கிளப்' மாஜி நிர்வாகிகள் மீது போலீசார் மோசடி வழக்கு பதிவு
'பிரஸ் கிளப்' மாஜி நிர்வாகிகள் மீது போலீசார் மோசடி வழக்கு பதிவு
ADDED : மார் 05, 2024 05:15 AM
கோவை : கோவையில் பத்திரிகையாளர்களுக்காக வழங்கப்பட்ட நிலத்தில் மோசடி செய்ததாக, பிரஸ் கிளப் முன்னாள் நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: கோவை பிரஸ் கிளப்பில், 150 பத்திரிகையாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களுக்கு வீட்டுமனை வழங்க கோவை, சுண்டக்காமுத்துாரில் பிரஸ் கிளப் பெயரில், 10.36 ஏக்கர் நிலம் வாங்கி லே-அவுட் அனுமதி பெறப்பட்டது.
பிரஸ் கிளப்பின் முன்னாள் நிர்வாகிகள் முகமது அஷ்ரப் மற்றும் அய்யப்பன் இருவரும், பிரஸ் கிளப்புக்கு சொந்தமான இடத்தை விற்பனை செய்ய அதிகாரம் அளிக்கப்பட்டது.
ஆனால், அந்த இடத்தை விற்று பணத்தை பிரஸ் கிளப் கணக்கில் செலுத்தாமல் தங்கள் பெயரில் பணத்தை பெற அந்த அதிகாரப் பத்திரத்தில், முகமது அஸ்ரப், அய்யப்பன் ஆகியோர் மாற்றம் செய்தனர். விற்பனைத் தொகை கோவை பிரஸ் கிளப்புக்கு வரவில்லை.
கடந்த, 2004ல் கிளப் நிர்வாகிகள் மாற்றப்பட்டு தலைவராக மல்லர் பொறுப்பேற்றார். அய்யப்பன் பொருளாளராகவும், முகமது அஸ்ரப் துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அப்போது, பிரஸ் கிளப்பின் தலைவராக இல்லாத கவுதம்சுமன் என்பவருடன் இணைந்து, அய்யப்பன், முகமது அஸ்ரப் ஆகியோர் சுண்டக்காமுத்துாரில் பத்திரிக்கையாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் இரு கடைகளை தங்களது பெயருக்கு மாற்றி பதிவு செய்தனர். மேலும் கோவை ஆடீஸ் வீதியில் மாநகராட்சி சார்பில் பிரஸ் கிளப்புக்கு, 3,000 சதுர அடி இடம் வழங்கப்பட்டது.
ஆனால், ஆவணங்களில் 'கோவை பத்திரிக்கையாளர் நல அறக்கட்டளை'யின் பெயரில் உள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இத்தகைய மோசடிகளை செய்த பிரஸ் கிளப் முன்னாள் நிர்வாகிகள் முகமது அஸ்ரப், அய்யப்பன் ஆகியோர் மீது பிரஸ் கிளப் தலைவர் பாபு சார்பில் புகார் அளிக்கப்பட்டது. மாநகர குற்றப்பிரிவு போலீசார் மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

