'மாஜி' கவுன்சிலர் வீட்டு பெண்களை மிரட்டிய போலீசாருக்கு அபராதம்
'மாஜி' கவுன்சிலர் வீட்டு பெண்களை மிரட்டிய போலீசாருக்கு அபராதம்
ADDED : செப் 09, 2025 05:47 AM

சென்னை : மதுரை மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் வீட்டு பெண்களை மிரட்டிய, போலீஸ் உதவி கமிஷனர் மற்றும் இரண்டு இன்ஸ்பெக்டர்களுக்கு, 2.50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் குருசாமி, கடந்த 2019ல் ஆணையத்தில் தாக்கல் செய்த மனு:
முன்னாள் அமைச்சர் ஒருவரின் துாண்டுதல் பேரில், காவல் துறையினர் என் மீதும், என் குடும்பத்தினர் மீதும், பொய் வழக்குகள் பதிவு செய்து கைது செய்தனர்.
எனது பேத்திக்கு காது குத்தும் விழா நடக்க இருந்த திருமண மண்டபத்தின் உரிமையாளரை, அன்றைய மதுரை உதவி கமிஷனர் உதயகுமார், இன்ஸ்பெக்டர்கள் நாகராஜன், மணிகண்டன் ஆகியோர் மிரட்டினர்.
வீட்டிற்கு வந்து சோதனை நடத்தி, காது குத்தும் விழாவில் கிடைத்த பரிசு பணம், 50 லட்சம் ரூபாயை எடுத்து சென்றனர். ஆனால், 18.86 லட்சம் ரூபாயை மட்டுமே பறிமுதல் செய்ததாக கணக்கில் காட்டினர்.
வீட்டில் இருந்த பெண்களை கைது செய்து விடுவதாக மிரட்டினர். மனித உரிமை மீறலில் ஈடுபட்ட, காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதை நேற்று விசாரித்த ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் பிறப்பித்த உத்தரவு:
மனுதாரர் குருசாமியின் வீட்டிற்கு சோதனை நடத்த சென்ற காவல் துறையினர், வீட்டில் இருந்த பெண்களை மிரட்டியது, ஆணையத்தின் விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டது. இதை காவல்துறையினரும் மறுக்கவில்லை; இது அப்பட்டமான மனித உரிமை மீறல்.
எனவே, பாதிக்கப்பட்ட மனுதாரர் குருசாமிக்கு, தமிழக அரசு, ஒரு மாதத்திற்குள் 2.50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.
இத்தொகையில் தலா 25,000 ரூபாயை, உதவி கமிஷனர் உதயகுமார், இன்ஸ்பெக்டர் நாகராஜன் ஆகியோரிடம் இருந்தும், 2 லட்சம் ரூபாயை இன்ஸ்பெக்டர் மணிகண்டனிடம் இருந்தும் வசூலித்துக் கொள்ளலாம். அவர்கள் மீது விதிகளின்படி ஒழுங்கு நட வடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.