கோட்டை நோக்கி சென்ற துாய்மை பணியாளர்கள் 900 பேரை குண்டுக்கட்டாக கைது செய்த போலீஸ்
கோட்டை நோக்கி சென்ற துாய்மை பணியாளர்கள் 900 பேரை குண்டுக்கட்டாக கைது செய்த போலீஸ்
ADDED : டிச 28, 2025 06:47 AM

சென்னை: பழைய முறைப்படியே, மாநகராட்சி வழியாக துாய்மை பணி வழங்க வலியுறுத்தி, கோட்டை நோக்கி பேரணி செல்ல முயன்ற, துாய்மை பணியாளர்கள் 900 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை ராயபுரம், திரு.வி.நகர் மண்டலங்களில் துாய்மை பணியை தனியார் நிறுவனத்திடம், சென்னை மாநகராட்சி ஒப்படைத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, துாய்மை பணியாளர்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ், தங்களுக்கு துாய்மை பணி வழங்க வேண்டும் எனக்கோரி, துாய்மை பணியாளர்கள் நான்கு பேர், அம்பத்துாரில் 42வது நாளாக, தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், முதல்வரிடம் மனு அளிக்க, கோட்டையை நோக்கி பேரணி செல்லப்போவதாக, துாய்மை பணியாளர்கள் அறிவித்தனர். நேற்று காலை பிராட்வே, என்.எஸ்.சி., போஸ் சாலையில், குறளகம் அருகே, 500க்கும் மேற்பட்டோர் திரண்டனர். இதனால், 300க்கும் மேற்பட்ட போலீசார் வந்தனர். பேரணி செல்ல விடாமல் போலீசார் தடுத்தனர். உடனே, துாய்மை பணியாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அவர்களை போலீசார் கைது செய்தனர். அப்போது, சில பெண்கள் கையில் பிளேடை வைத்துக் கொண்டு, கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொள்வோம் என, மிரட்டல் விடுத்தனர்.இதையடுத்து, பலரையும் குண்டுக்கட்டாக துாக்கி, பஸ்களில் ஏற்றிச்சென்று தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.
துாய்மை பணியாளர்கள் சென்னை மாநகராட்சி அலுவலகத்திற்கு வரக்கூடும் என்பதால், முன்னெச்சரிக்கையாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ஏற்கனவே, கடந்த டிச., 5ல், துாய்மை பணியாளர்கள், இதேபோல் கோட்டையை நோக்கி பேரணி செல்ல முயன்று, 800 பேர் கைது செய்யப்பட்டனர்.

