சண்டிமாடு தமிழக அரசு... தார்க்குச்சி பாமக: உதாரணம் சொன்ன அன்புமணி
சண்டிமாடு தமிழக அரசு... தார்க்குச்சி பாமக: உதாரணம் சொன்ன அன்புமணி
ADDED : செப் 13, 2025 01:56 PM

சென்னை: அறிவிக்கப்பட்ட திட்டங்களையும், அளிக்கப்பட்ட வாக்குறுதிகளையும் கூட திமுக அரசு செயல்படுத்தாமல் குறட்டை விட்டு உறங்குவதாக பாமக தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கை;
ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு தமிழக மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி அளித்ததைக் கண்டித்தேன். அனுமதியை திரும்பப் பெறும்படி மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திற்கு அறிவுறுத்தப்படும் என்று அன்று மாலையே தமிழக அரசு அறிவித்தது.
ஆனால், அதன்பின் 15 நாள்களாகியும் அனுமதி ரத்து செய்யப்படாததை சுட்டிக்காட்டியும், கண்டித்தும் செப்.7ம் தேதி மீண்டும் ஓர் அறிக்கை வெளியிட்டேன். கடந்த 10ம் தேதி ஹைட்ரோ கிணறுகள் அமைக்க அளிக்கப்பட்ட அனுமதியை ஏன் ரத்து செய்யக்கூடாது என்று விளக்கம் கேட்டு ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அறிவிக்கை அனுப்பியுள்ளது.
அதேபோல், மார்ச் 15ம் நாள் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட வேளாண்மை நிதிநிலை அறிக்கையில், முந்திரியின் பரப்பினை உயர்த்தி, உற்பத்தியை அதிகரிக்கவும், முந்திரிசார் தொழில் நிறுவனங்களுக்கு ஊக்கம் அளிக்கவும், முந்திரி தொழிலில் ஈடுபட்டு உள்ள தொழிலாளர்களின் நலன்களை பாதுகாக்கவும் ரூபாய் 10 கோடி நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாடு முந்திரி வாரியம் (Tamil Nadu Cashew Board) ஏற்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்பின் 6 மாதங்களாகியும் அந்த அறிவிப்பு செயல்படுத்தப்படாதது ஏன்? என்று கடந்த 10ம் தேதி பண்ருட்டியில் நடைபெற்ற முந்திரி விவசாயிகளுடனான சந்திப்பின் போது நான் வினா எழுப்பியிருந்தேன்.
அதைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு விழித்துக் கொண்டு முந்திரி வாரியம் அமைப்பதற்கான அரசாணையை நேற்று பிறப்பிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்திருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, மக்களுக்கான அறிவிப்புகளை உடனுக்குடன் செயல்படுத்த வேண்டும்.
ஆனால், ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு அறிவிப்புகளை மட்டும் தான் வெளியிடும். அத்துடன் கடமை முடிந்து விட்டதாகக் கருதி கும்பகர்ணன் உறக்கத்திற்கு சென்று விடும். அதன்பின் அதை பாமக சுட்டிக்காட்டி தட்டி எழுப்பினால் தான் விழித்துக் கொண்டு செயல்படும். இதற்கு ஆயிரமாயிரம் எடுத்துக்காட்டுகளைக் கூற முடியும்.
“சண்டி மாடு தானாக ஓடாது... தார்க்குச்சியால் குத்தினால் தான் ஓடும்” என்று கிராமப்புறங்களில் கூறுவார்கள். அதைப் போலத் தான் செயல்படாத சண்டி மாடாக திராவிட மாடல் அரசு இருக்கிறது; அதை செயல்பட வைக்கும் தார்க்குச்சியாக பாமக திகழ்கிறது.
இவ்வாறு அன்புமணி கூறியுள்ளார்.