ஏழை மக்கள் பங்களிப்பில் 6,000 வீடுகள் கட்ட திட்டம்
ஏழை மக்கள் பங்களிப்பில் 6,000 வீடுகள் கட்ட திட்டம்
ADDED : நவ 27, 2025 02:07 AM
சென்னை: தமிழகத்தில் ஏழை மக்களுக்கு, 6,000 வீடுகள் கட்ட, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் திட்டமிட்டுள்ளது.
நகர்ப்புற ஏழை மக்களுக்கு, பல்வேறு திட்டங்கள் வாயிலாக வீடுகள் கட்டி கொடுக்கப்படுகின்றன. தமிழக அரசு, மத்திய அரசு நிதி மட்டுமல்லாது, சர்வதேச அமைப்புகளிடம் நிதி பெற்றும், இத்திட்டத்திற்கு செலவிடப்படுகிறது.
இதில், ஆட்சேபகரமான இடங்களில் இருந்து வெளியேற்றப்படும் மக்களுக்காக மட்டுமல்லாது, பிற இடங்களில் வசிப்போருக்கும் வீடு கட்டி கொடுக்கும் பணிகள் நடந்து வருகின்றன. தற்போது செயல்படுத்தப்படும் திட்டங்களில், மக்கள் பங்கேற்பு பெயரளவுக்கே உள்ளது.
இந்நிலையில், தமிழக நகர்ப்புற வீட்டுவசதி மேம்பாட்டு திட்டம் உருவாக்கப்பட்டது. இத்திட்டத்துக்கு, உலக வங்கியிடம் இருந்து, 1,400 கோடி ரூபாய் நிதி பெறப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, நகர்ப்புற வீட்டுவசதிக்கான அடிப்படை கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இருப்பினும், வீடு கட்டும் பணிகள் எப்போது நடக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
உலக வங்கி நிதி உதவி திட்டத்தில், அடிப்படை பணிகளுக்காக இதுவரை, 491 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. அடுத்த கட்ட பணிகளுக்கு, 198 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், நகர்ப்புற ஏழை மக்களுக்கு, அவர்களின் பங்கேற்புடன், 6,000 வீடுகள் கட்ட திட்டமிட்டு இருக்கிறோம். ஒரு வீட்டின் மொத்த மதிப்பில், பயனாளிகளின் பங்காக 3.10 லட்சம் ரூபாய் வரை இருக்க வாய்ப்புள்ளது.
எந்தெந்த மாவட்டத்தில், எத்தனை வீடுகள் கட்ட வேண்டும் என்பதற்கான கணக்கெடுப்பும் நடந்து வருகிறது. விரைவில் வீடுகள் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

