குழாய் மூலம் காஸ் என்பது வேடிக்கையான வாக்குறுதி: சொல்கிறார் ப.சிதம்பரம்
குழாய் மூலம் காஸ் என்பது வேடிக்கையான வாக்குறுதி: சொல்கிறார் ப.சிதம்பரம்
UPDATED : ஏப் 18, 2024 03:35 PM
ADDED : ஏப் 15, 2024 12:33 PM

காரைக்குடி: குழாய் மூலமாக காஸ் வழங்கப்படும் என பா.ஜ., வாக்குறுதி அளித்த நிலையில், 'குழாய் மூலமாக தண்ணீரே வழங்க முடியாதவர்கள், காஸ் எப்படி வழங்குவார்கள், இது வேடிக்கையான வாக்குறுதி' என காங்கிரஸ் ராஜ்யசபா எம்.பி., ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பா.ஜ., தேர்தல் அறிக்கையில் புதிய திட்டங்கள், அறிவிப்புகள் என எதுவும் இல்லை. நாட்டில் 5 சதவீதம் பேர் மட்டுமே வறுமையில் இருப்பதாக நிடி ஆயோக் கூறும் நிலையில், 80 கோடி மக்களுக்கு இலவச உணவு தானியம் ஏன்? குழாய் மூலமாக தண்ணீரே வழங்க முடியாதவர்கள், சமையல் காஸ் எப்படி வழங்குவார்கள்? குழாய் மூலமாக காஸ் என்பது வேடிக்கையான அறிவிப்பு.
வீடுகளை காட்ட முடியுமா
கடந்த 10 ஆண்டுகளில் 4 கோடி வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளதாக தேர்தல் அறிக்கையில் பா.ஜ., கூறியது பொய்க்கணக்கு. 4 கோடி வீடுகளை கட்டியிருந்தால், சராசரியாக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 52 ஆயிரம் வீடுகளை கட்டி இருக்க வேண்டும். அப்படியெனில் சிவகங்கை மாவட்டத்தில் பா.ஜ., அரசு கட்டிக்கொடுத்த 52 ஆயிரம் வீடுகளை காட்ட முடியுமா?
புல்லட் ரயில்
அனைத்து ஊர்களுக்கும் புல்லட் ரயில் இயக்கப்படும் என்ற வாக்குறுதியும் வேடிக்கையானது. ஒரு புல்லட் ரயிலுக்கு ரூ.1.1 லட்சம் கோடி செலவு செய்யத் தயாராக உள்ள பா.ஜ., அரசு, போதிய விபத்து தடுப்புக் கருவிகளை பொருத்தாதது ஏன்?. 9 ஆண்டுகளில் பெருமுதலாளிகளின் ரூ.11 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. பெருமுதலாளிகளின் பல லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்யும் பா.ஜ., அரசு, மாணவர்களின் கல்விக்கடனை தள்ளுபடி செய்ய மறுக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

