ADDED : ஆக 06, 2025 04:08 AM

வானுார்: தைலாபுரம் இல்லத்தை, 'வைபை' மோடம் வாயிலாக அன்புமணி தரப்பு கண்காணித்துள்ளது. அதை விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு, ராமதாஸ் உதவியாளர் பெயரில், போலீசில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
பா.ம.க., நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. இருவரும் அடுத்ததடுத்து, கட்சியின் பொதுக்குழு கூட்டங்களை தனித்தனியே கூட்டி உள்ளனர்.
இதனிடையே, கடந்த ஜூலை 15ம் தேதி, தன் இல்லத்தில் ஒட்டுக்கேட்பு கருவி வைக்கப்பட்டுள்ளதாக கிளியனுார் போலீசில் ராமதாஸ் புகார் அளித்தார்.
அதையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு, 'என் வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவியை வைத்தது அன்புமணி தான்' என ராமதாஸ் பகிரங்கமாக குற்றஞ்சாட்டி இருந்தார்.
இந்நிலையில், 'வைபை' மோடம் மூலம் தைலாபுரம் இல்லத்தை கண்காணிப்பதாக, அன்புமணியின் பைனான்ஸ் மேலாளர் சசிகுமார் மீது, கோட்டக்குப்பம் டி.எஸ்.பி., உமாதேவியிடம் நேற்று புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
ராமதாஸின் நேர்முக உதவியாளர் சாமிநாதன் லெட்டர் பேடில் எழுதப்பட்ட புகார் மனு, நேற்று அளிக்கப்பட்டது. அத்துடன், வைபை மோடமும் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.
புகார் மனுவில், 'தைலாபுரத்தில் பா.ம.க., நிறுவனர் ராமதாசின் இல்ல நடவடிக்கைகள் மற்றும் சிசிடிவி கேமரா, தொலைபேசி ஆகியவை சட்டவிரோதமாக 'ஹேக்' செய்யப்பட்டுள்ளன. இதைச் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
'அன்புமணியின் பைனான்ஸ் மேலாளர் சசிகுமார் தான் இந்த காரியத்தை செய்திருக்க வேண்டும். அவர் மீது சந்தேகம் இருப்பதால், அவரை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டி.எஸ்.பி., உமாதேவி கூறுகையில், ''சிசிடிவி கேமரா ஹேக் செய்யப்பட்டது தொடர்பாக மனு கொடுத்துள்ளனர். உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் உத்தரவுப்படி வழக்குப்பதிவு செய்தவதா அல்லது மனுவை சைபர் கிரைம் பிரிவு விசாரணைக்கு மாற்றுவதா என முடிவு செய்யப்படும்,” என்றார்.

