ரேஷன் கடைகளில் தங்கம், வௌ்ளி விற்கக்கோரி முதல்வருக்கு மனு
ரேஷன் கடைகளில் தங்கம், வௌ்ளி விற்கக்கோரி முதல்வருக்கு மனு
ADDED : டிச 23, 2025 07:39 AM

சென்னை : 'ஏழை மக்கள் பயன்பெறும் வகையில், சிறிய வகை தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை, ரேஷன் கடைகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் வாயிலாக மானிய விலையில் விற்க, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, முதல்வரின் தனிப்பிரிவில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஏழை, எளியோர், நடுத்தர மக்கள் நலச்சங்க தலைவர் லிங்கபெருமாள் அளித்துள்ள மனு:
தமிழகத்தில் சமீப நாட்களில், தங்க நகை ஒரு சவரன், ஒரு லட்சம் ரூபாயை கடந்து விற்பனை செய்யப்படுகிறது. இதனால், ஏழை மக்கள், குறிப்பாக பெண்கள், தங்க நகைகளை, திருமணம், காதுகுத்து மற்றும் சுப காரியங்களுக்கு வாங்கி பயன்படுத்துவது கேள்விக்குறியாகி உள்ளது.
கல்லுாரி செல்லும் ஏழை குடும்பங்களை சேர்ந்த மாணவியர், சிறிய அளவில், தங்க சங்கிலி கூட அணிந்து செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு, வேதனையில் உள்ளனர்.
எனவே, ஏழை குடும்பத்தை சேர்ந்த கல்லுாரி மாணவியருக்கு, மானிய விலையிலும், குறைந்த விலையிலும், கழுத்து சங்கிலி மற்றும் காதணிகள் உள்ளிட்ட தங்க நகைகள் மற்றும் வெள்ளி நகைகளை, கூட்டுறவு வங்கிகள் மற்றும் ரேஷன் கடைகள் வாயிலாக விற்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

