ஆழ்கடலில் எரிவாயு எடுக்க அனுமதி; பா.ம.க., எதிர்ப்பு
ஆழ்கடலில் எரிவாயு எடுக்க அனுமதி; பா.ம.க., எதிர்ப்பு
ADDED : ஏப் 28, 2025 04:59 AM

சென்னை : தமிழகத்தில், கன்னியாகுமரி அடுத்த ஆழ்கடல் பகுதியில் மூன்று இடங்களிலும், சென்னை அருகே ஓரிடத்திலும், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு எடுக்க, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 32,484 சதுர கி.மீ., பரப்பளவில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த திட்டத்துக்கு, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்து வெளியிட்ட அறிக்கை:
மத்திய அரசின் இந்த திட்டத்தால் கடல் வளம் பாதிக்கப்படுவதுடன், சுற்றுச்சூழலும் சீர்கெடும் என, வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர். அதை மீறி அனுமதி அளித்திருப்பது கண்டிக்கத்தக்கது.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் துவக்கப்பட்ட, 9ம் சுற்று ஏலத்தின் அடிப்படையில், இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏலத்திற்கு ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டபோதே, பா.ம.க., எதிர்ப்பு தெரிவித்தது.
தமிழகத்தில் நான்கு இடங்களில், ஆழ்கடலில் எண்ணெய், எரிவாயு எடுக்க, ஓ.என்.ஜி.சி., நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டுள்ள அனுமதியை, ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

