UPDATED : பிப் 07, 2024 02:32 AM
ADDED : பிப் 06, 2024 11:13 PM

உரிமையாளரின் சுயசான்று அடிப்படையில், கட்டுமான திட்டங்களுக்கு அனுமதி வழங்கும் புதிய நடைமுறை தொடர்பான ஆய்வுகள் துவங்கியுள்ளன.
தமிழகத்தில் நகரமைப்பு சட்டம், பொது கட்டட விதிகள் அடிப்படையில், கட்டுமான திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்படுகிறது. அதில், விதிக்கப்பட்ட நிபந்தனைகளின்படி கட்டடங்கள் கட்டப்படுகின்றனவா என்பதை கண்காணிப்பதற்கு தனி பிரிவுகள் உள்ளன.
விதிகளுக்கு உட்பட்டு கட்டப்பட்ட கட்டடங்களுக்கு பணி நிறைவு சான்றிதழ் வழங்கப்படுகிறது. தற்போதைய நிலையில், மூன்று வீடுகளுக்கு மேற்பட்ட கட்டடங்களுக்கு பணி நிறைவு சான்று கட்டாயம். இந்த வரம்பு, எட்டு வீடுகள் வரை நீட்டிக்கப்பட உள்ளது.
இந்நிலையில், நில உரிமையாளர், தொழில் முறை வல்லுனர்களின் சுயசான்று அடிப்படையில், கட்டடங்கள் கட்ட அனுமதிக்கும் புதிய நடைமுறையை அமல்படுத்த, 'கிரெடாய்' உள்ளிட்ட அமைப்புகள் அரசிடம் வலியுறுத்தியுள்ளன. இது தொடர்பான பூர்வாங்க ஆய்வுகள் நடந்து வருவதாக, வீட்டுவசதி நகர்ப்புற வளர்ச்சி துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, இந்திய கட்டுனர் வல்லுனர் சங்கத்தின் தென்னக மைய நிர்வாகி எஸ்.ராமபிரபு கூறியதாவது:
குஜராத், கர்நாடகம், ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில், பொறியாளர், உரிமையாளர் சுயசான்று அடிப்படையில் கட்டடம் கட்டலாம்.
இதன்படி, அரசிடம் பதிவு செய்த பொறியாளர் வாயிலாக வரைபடம் தயாரித்து, சம்பந்தப்பட்ட துறையில் தாக்கல் செய்து விட்டு, கட்டடம் கட்டும் பணிகளை துவக்கலாம்.
![]() |
இவ்வாறு அவர் கூறினார்.
பிற மாநிலங்களை விட, தமிழகத்தில் கட்டட விதிமீறல்கள் அதிகமாக உள்ளன. இந்நிலையில், சுயசான்று முறையில் கட்டிக் கொள்ளலாம் என்றால், விதிமீறல் செய்வோர் ஆதிக்கம் அதிகரித்து விடும். விதிமீறல் கட்டடம் கட்டினால், அதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு கடும் தண்டனை கொடுக்க வகை செய்ய வேண்டும். கட்டட விதிமீறலை கண்காணிப்பதற்கான பணியிடங்களை அதிகரிக்க வேண்டும். அப்போது தான் இதுபோன்ற நடைமுறைகளின் பயன் மக்களுக்கு கிடைக்கும்.
-பி.மணிசங்கர், தலைவர், தமிழக வீடு, அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவோர் சங்கம்.
- நமது நிருபர் -


