'தாய்மொழி பேச முடியாமல் கஷ்டப்படும் தமிழக மக்கள்' அண்ணாமலை வருத்தம்
'தாய்மொழி பேச முடியாமல் கஷ்டப்படும் தமிழக மக்கள்' அண்ணாமலை வருத்தம்
ADDED : ஜன 12, 2024 12:17 AM
ஓசூர்:''தமிழக எல்லையில் உள்ள மக்கள், தங்கள் சொந்த மொழியை பேச முடியாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர்,'' என, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம், வேப்பனஹள்ளி சட்டசபை தொகுதிக்குட்பட்ட ராயக்கோட்டையில், பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, 'என் மண்; என் மக்கள்' பாத யாத்திரை நிகழ்ச்சியை நேற்று நடத்தினார்.
அப்போது அவர் பேசியதாவது:
தமிழகத்தின் எல்லைப்புற பகுதியில், மூன்று மொழியும் பேசினால் தான், மக்களிடம் நன்றாக பேச முடியும். புதிய கல்வி கொள்கையின் நோக்கமே, மும்மொழி கொள்கை தான். தமிழகத்தின் எல்லையில் உள்ள மக்கள் வளர்ச்சி இல்லாமல், சொந்த மொழியை பேச முடியாமல் கஷ்டப்பட்டு கொண்டிருக்கின்றனர்.
அதையெல்லாம் உடைப்பதற்கு ஒரு வாய்ப்பாக, வரும் லோக்சபா தேர்தலில், மூன்றாவது முறையாக பிரதமர் மோடிக்கு வாய்ப்பளிக்க வேண்டும். பா.ஜ., உறுதி கொடுப்பது என்னவென்றால் தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் பள்ளிகள் ஆரம்பிக்கப்படும்.
இப்பகுதி இளைஞர்கள் பெங்களூரில் வேலை செய்கின்றனர். இளைஞர்கள் வளர்ச்சி தான் நாட்டின் வளர்ச்சி.
இவ்வாறு அவர் பேசினார்.
காவடி சுமந்து ஆட்டம்
ராயக்கோட்டை அண்ணாதுரை சிலை சர்க்கிள் பகுதியில், தே.மு.தி.க.,வினர் வைத்திருந்த விஜயகாந்த் படத்திற்கு, அண்ணாமலை மலர் துாவி மரியாதை செலுத்தி பேசுகையில், ''விஜயகாந்த் படத்தில் மட்டுமல்ல; நிஜத்திலும் கேப்டனாக இருந்தார். இதை பிரதமர் மோடியும் தன் பேச்சில் சுட்டிக்காட்டினார்,'' என்றார்.
முன்னதாக ராயக்கோட்டை ஆஞ்சநேயர் கோவிலில், அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு தரிசனம் செய்தார்.
அவருக்கு காவடி ஆடியபடி வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது ஒருவரிடம் காவடியை வாங்கிய அண்ணாமலை, அதை தன் தோளில் வைத்து ஆடினார்.

