ADDED : நவ 16, 2024 12:14 AM
சென்னை:இணை ரயில்கள் வருவதில் தாமதம் ஏற்பட்டதால், சென்னை சென்ட்ரலில் இருந்து வெளி மாநிலங்களுக்கு செல்ல வேண்டிய ஐந்து ரயில்கள், பல மணி நேரம் தாமதமாக புறப்பட்டன.
வெளி மாநிலங்களுக்கு இடையே இயக்கப்படும் ரயில்கள், பல்வேறு இடர்பாடுகள் காரணமாக, வந்தடைவதில் தாமதம் ஏற்படும். இதனால், சரியான நேரத்தில் புறப்படுவதில் தாமதம் ஏற்படும்.
அதன்படி, சென்னை சென்ட்ரலில் இருந்து மேற்கு வங்க மாநிலம் சாலிமாருக்கு நேற்று காலை 7:00 மணிக்கு புறப்பட வேண்டிய கோரமண்டல் விரைவு ரயில், 4.30 மணி நேரம் தாமதமாக, அதாவது காலை 11:30 மணிக்கு புறப்பட்டு சென்றது.
சென்ட்ரல் - குஜராத் மாநிலம் ஆமதாபாத்துக்கு காலை 10:10 மணிக்கு புறப்பட வேண்டிய நவஜீவன் ரயில், 2.20 மணி நேரம் தாமதமாகவும், கோவை - ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு நேற்று காலை 9:25 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில் 6.50 மணி நேரம் தாமதமாகவும் புறப்பட்டு சென்றன.
எர்ணாகுளம் - பீஹார் மாநிலம் பாருணி ரயில், 12.25 மணி நேரம் தாமதமாகவும், விழுப்புரம் - தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் ரயில், ஆறு மணி நேரம் தாமதமாகவும் நேற்று புறப்பட்டு சென்றன.
இதனால், சென்ட்ரல், கோவை, விழுப்புரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில், பயணியர் பல மணி நேரம் காத்திருந்து அவதிப்பட்டனர். சிலர், ரயில் டிக்கெட்டை ரத்து செய்து வீடு திரும்பினர்.

