ADDED : நவ 12, 2024 01:16 AM
சென்னை: முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் நேற்று மாலை மதுரையில் இருந்து, ஏர் இந்தியா பயணியர் விமானத்தில் சென்னை வந்தார். விமானத்தில் இருந்து இறங்கி வெளியில் வந்தவர், தன் காரில் அமர்ந்தார்.
அப்போது சட்டை பையில், மொபைல் போன் இல்லாததை கண்டார். பாதுகாப்பு பணியிலிருந்த போலீசாரிடம், மொபைல் போனை, விமான நிலைய வி.ஐ.பி., அறையில் மறந்து வைத்து விட்டேன். அதை எடுத்து வந்து தாருங்கள் என்றார்.
போலீசார் விமான நிலைய மேலாளருக்கு தகவல் தெரிவித்தனர். வி.ஐ.பி.,க்கள் அறையில் தேடிய போது, மொபைல் போன் இல்லை.
அதைத் தொடர்ந்து, அவர் பயணம் செய்த விமானத்தில் தேடிய போது, அவரது இருக்கையில் மொபைல் போன் இருப்பதை, விமான ஊழியர்கள் கண்டுபிடித்தனர். அவர்கள் அதை எடுத்து விமான நிலைய மேலாளரிடம் ஒப்படைத்தனர்.
விமானத்தில் தவற விட்ட பொருட்களை திரும்ப பெற, சில நடைமுறைகள் உள்ளன. அதன்படி பன்னீர்செல்வம் போர்டிங் பாஸ் வேண்டும். அந்தப் பொருளை யாரிடம் கொடுக்க சொல்கிறார் என்ற சான்று வேண்டும் என்று, மேலாளர் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து போலீசார், பன்னீர்செல்வத்திடம் வந்து, அவரது போர்டிங் பாஸ் மற்றும் அவரது கையெழுத்தை வாங்கினர்.
மொபைல் போன் வர சிறிது நேரமாகும். நீங்கள் வீட்டிற்கு செல்லுங்கள். மொபைல் போனை வீட்டிற்கு வந்து கொடுக்கிறோம் என்று போலீசார் தெரிவித்தனர்.
அதை ஏற்று, அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். அதன்பின் நடைமுறைகளை முடித்து, ஒரு மணி நேரத்திற்கு பிறகு, அவரது மொபைல் போனை, அவரது வீட்டிற்கு போலீசார் கொடுத்து அனுப்பினர். இச்சம்பவத்தால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

