கார்ட்டூன் விவகாரத்தில் பழனிசாமி டென்ஷன்; துாங்கி வழிகிறதா அ.தி.மு.க., - ஐ.டி., அணி?
கார்ட்டூன் விவகாரத்தில் பழனிசாமி டென்ஷன்; துாங்கி வழிகிறதா அ.தி.மு.க., - ஐ.டி., அணி?
ADDED : ஜூன் 22, 2025 01:11 AM

அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி குறித்த கார்ட்டூன் விவகாரத்தில், கட்சியின் ஐ.டி., அணி செயல்பாட்டில் கடும் கோபம் அடைந்த அவர், நிர்வாகிகளுக்கு டோஸ் விட்டுள்ளார்.
சமூக வலைதளங்களில் தி.மு.க., மற்றும் பா.ஜ., கட்சிகளின் ஐ.டி., அணியினர் தான் வேகமான நடவடிக்கைகளை கொண்டுள்ளனர். அதற்காக, இரு கட்சிகள் சார்பில், மாதம் தோறும் பெரும் தொகையும் செலவிடப்படுகிறது.
மோசமான பதிவு
ஆனால், அ.தி.மு.க., - ஐ.டி., அணி செயல்பாடு, அந்த அளவுக்கு இல்லை என அக்கட்சியினரே வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர்.
இதை உறுதிசெய்யும் வகையில், கீழடி விவகாரத்தில் பழனிசாமியை மிகக் கடுமையாக விமர்சித்தும் கார்ட்டூன் வரைந்து, ஒரு மோசமான பதிவை, 'எக்ஸ்' தளத்தில், ஜூன் 17ம் தேதி மாலை, தி.மு.க., - ஐ.டி. அணி வெளியிட்டது. அதற்கு, அ.தி.மு.க., - ஐ.டி., அணியிடம் இருந்து, உடனடி ரியாக்ஷன் எதுவும் இல்லை.
இந்த விமர்சன பதிவு தொடர்பாக, சில நாளிதழ்களில் செய்தி வெளியானது. அதன்பின்பே, பழனிசாமியை மோசமாக சித்தரித்து வெளியான கார்ட்டூன் விவகாரம், கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கே தெரிந்தது.
தன்னை வைத்து வெளியிடப்பட்ட கார்ட்டூனைப் பார்த்ததும் பழனிசாமிக்கு கடும் கோபம் ஏற்பட்டது.இதனால், கட்சியின் ஐ.டி., அணி நிர்வாகிகளை அழைத்த பழனிசாமி, 'தி.மு.க., வெளியிட்ட கார்ட்டூனுக்கு உடனடியாக ஏன் பதிலடி கொடுக்கவில்லை?' எனக் கேட்டு அவர்களை கடிந்து கொண்டுள்ளார்.
மறைமுக தொடர்பு
கட்சியின் மாவட்ட செயலர்களை அழைத்து, புகார் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார். அதன் பிறகே, தி.மு.க., - ஐ.டி., விங் அணியின் செயலரும் அமைச்சருமான டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்டோர் மீது, அனைத்து மாவட்டங்களிலும் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
கார்ட்டூன் வெளியாகி, மூன்று நாள் கழித்து புகார் அளித்ததன் வாயிலாக, ஐ.டி., விங் செயல்பாடின்றி இருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக அ.தி.மு.க.,வினர் கூறுகின்றனர்.
இது குறித்து, கட்சி நிர்வாகிகள் கூறியதாவது:
பழனிசாமி தலைமையில் நடந்த மாவட்ட செயலர்கள் கூட்டங்களில், ஐ.டி., அணி குறித்து புகார் தெரிவித்ததால், புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
அ.தி.மு.க., ஐ.டி., அணியினர், தி.மு.க.,வுக்கு சமூக வலைதளங்களில் பதிலடி கொடுத்து, தொடர் பதிவுகள் போட்டதும், தி.மு.க., அரசு சம்பந்தப்பட்டவர்களை கைது செய்தது. அதனால், அடுத்தடுத்தும் வேகமாக செயல்படாமல், அ.தி.மு.க., ஐ.டி., அணி நிர்வாகிகள் முடங்கினர்.
அ.தி.மு.க., ஐ.டி., அணியில் இருப்போர் பலரும் தனியார் நிறுவன ஊழியர்கள். சமூக வலைதளங்களில் அரசுக்கும் தி.மு.க.,வுக்கு எதிராக பதிவிட்டு கைதானால், பின், அரசு வேலை கிடைக்காது என்ற அச்சத்திலும் பலரும் அமைதியாக உள்ளனர்.
இதை சரிசெய்யும் பொறுப்பில் இருக்கும் அ.தி.மு.க., - ஐ.டி., அணியின் முக்கிய தென் மாவட்ட நிர்வாகி, ஆர்வமின்றி இருப்பதோடு, தி.மு.க.,வோடு மறைமுக தொடர்பிலும் இருப்பதால், ஐ.டி., அணியினர் மொத்தமாக சுணங்கி உள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
-- நமது சிறப்பு நிருபர் --

