'தி.மு.க.,வின் உருட்டும், திருட்டும்'; புதிய பிரசாரம் துவக்கினார் பழனிசாமி
'தி.மு.க.,வின் உருட்டும், திருட்டும்'; புதிய பிரசாரம் துவக்கினார் பழனிசாமி
UPDATED : ஜூலை 26, 2025 07:18 AM
ADDED : ஜூலை 26, 2025 03:39 AM

புதுக்கோட்டை: “அ.தி.மு.க., ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை, தி.மு.க., ஆட்சியில் நிறுத்தி விட்டனர்,” என அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்தார்.
நேற்று, அவர் அளித்த பேட்டி:
நேர்மையான காவல் துறை அதிகாரிகளுக்கு தி.மு.க., ஆட்சியில் மரியாதை இல்லை. 'சஸ்பெண்ட் ஆர்டர்'தான் பரிசாக தி.மு.க., அரசு கொடுக்கிறது. நல்ல அரசுக்கு இது அழகல்ல.
அ.தி.மு.க., சார்பில் வீடு, வீடாக கட்சியினர் செல்லப் போகின்றனர். மக்களிடம், 'தி.மு.க., ஆட்சிக்கு எவ்வளவு மார்க் போடுவீர்கள்?' என கேட்கப் போகிறோம்.
அவர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்; வற்புறுத்த மாட்டோம். கருத்து சொல்வோர் மொபைல் எண்ணை கேட்க மாட்டோம்; ஓ.டி.பி., வரவழைக்க மாட்டோம்.
தகிடுதத்தங்கள் அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியை உடைக்கப் பார்க்கின்றனர்.
அமித் ஷா மற்றும் பிரதமர் மோடி வீட்டு கதவை நான் தட்டியதாக, உதயநிதி போகும் இடமெல்லாம் கூறுகிறார். என்னை குறித்து பொய் சொல்லும் அவரும், அவருடைய அப்பா ஸ்டாலினும் பிரதமர் வீட்டு கதவைத் தட்டி, அவரைப் போய் சந்தித்தது ஏன்?
தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.ம.மு.க., இருப்பதாக, தினகரன் தான் கூறி வருகிறார்; நாங்கள் கூறவில்லை. அவர் குறித்து, எங்களுக்கு எதுவும் தெரியாது. நாங்கள் பா.ஜ.,வுடன் தான் கூட்டணி வைத்துள்ளோம்.
அ.தி.மு.க., ஆட்சி காலத்தில், கொரோனா காலம் தவிர மற்ற காலங்களில் மாணவர்களுக்கு லேப்-டாப் இலவசமாகக் கொடுக்கப்பட்டது. தாலிக்கு தங்கம் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தினோம்.
நாங்கள் கொண்டு வந்த திட்டங்கள் என்பதாலேயே, அவற்றை தி.மு.க., அரசு நிறுத்தி மக்களை ஏமாற்றி வருகிறது.
எங்கள் ஆட்சி காலத்தில் கொண்டு வர முயன்ற திட்டம் என்பதாலேயே, காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தையும் கிடப்பில் போட்டுள்ளனர். அ.தி.மு.க., அரசு வந்ததும், இத்திட்டங்கள் அனைத்தும் நிறை வேற்றப்படும்.
தமிழகத்தில் அரங்கேறும் கிட்னி திருட்டில், தி.மு.க., -- எம்.எல்.ஏ., இயக்குநராக இருக்கும் ஒரு மருத்துவமனைக்கு தொடர்பு உள்ளது. இதை மக்கள் புரிந்து கொள்வர். வறுமை காரணமாக கிட்னி திருட்டுகள் நடக்கின்றன.
அதில் காசு பார்க்கும் அரசியல்வாதிகளை என்ன செய்வது? தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கை தில்லுமுல்லுகள் குறித்துத்தான், வீடு வீடாக அ.தி.மு.க.,வினர் சென்று மக்களை சந்தித்து, தி.மு.க.,வின் தகிடுதத்தங்கள் குறித்து விளக்க உள்ளனர். இவ்வாறு பழனிசாமி கூறினார்.
மார்க் போட வேண்டும் பின், தி.மு.க., தேர்தல் வாக்குறுதி 'உருட்டுகளும், திருட்டுகளும்' பிரசார திட்டத்தை பழனிசாமி துவக்கி வைத்தார்.
இத்திட்டப்படி, அ.தி.மு.க., சார்பில் பிரின்ட் செய்யப்பட்ட ஒரு, 'ஸ்கிராட்ச் கார்டு' கொடுக்கப்படும். அதில், தி.மு.க., கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளும், அவற்றை செயல்படுத்தாதது குறித்தும் அச்சிடப் பட்டிருக்கும்.
ஸ்கிராட்ச் கார்டை சுரண்டினால், வாக்குறுதி எண்ணுடன் தி.மு.க., அளித்த தேர்தல் வாக்குறுதிகள் தெரியும். அதை படித்துப் பார்த்து, மக்கள் மார்க் போட வேண்டும்.

