அ.தி.மு.க., பொறுப்பாளர்களின் செயல்பாடுகளால் பழனிசாமி... 'அப்செட்!' : தேர்தல் நாளில் பூத் ஏஜன்ட்கள் 'ஆப்சென்ட்'டால் கடுப்பு
அ.தி.மு.க., பொறுப்பாளர்களின் செயல்பாடுகளால் பழனிசாமி... 'அப்செட்!' : தேர்தல் நாளில் பூத் ஏஜன்ட்கள் 'ஆப்சென்ட்'டால் கடுப்பு
UPDATED : ஏப் 29, 2024 12:43 AM
ADDED : ஏப் 29, 2024 12:17 AM

தேர்தல் நேரத்தில், அ.தி.மு.க., பொறுப்பாளர்கள், கட்சி நிர்வாகிகள் நடந்து கொண்ட விதம் குறித்து, தமிழகம் முழுதும் இருந்து வரும் தகவல்களால், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, 'அப்செட்'டாகி உள்ளார். தேர்தல் களத்தில் கட்சியினர், வேட்பாளர்களுக்கு முழுமையாக ஒத்துழைப்பு தரவில்லை; ஓட்டு சேகரிக்கவில்லை. ஓட்டுப்பதிவு நாளன்று, பூத் ஏஜன்ட்களாக நியமிக்கப்பட்ட பலர், பூத்தில் இல்லை என சரமாரியாக புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளதால், இந்த விபரம் உண்மையானதா என்ற விசாரணையில் பழனிசாமி இறங்கியுள்ளார். அதனால், தேர்தல் முடிவுகள் வெளியான பின், கட்சி கட்டமைப்பில் பல அதிரடி மாற்றங்களை பழனிசாமி மேற்கொள்வார் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து அ.தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:
லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., தலைமையில் வலுவான கூட்டணி அமையவில்லை என்றதும், அக்கட்சி சார்பில் போட்டியிட முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலர்கள் உள்ளிட்டநிர்வாகிகள் யாரும் முன்வரவில்லை.
பழனிசாமி வலியுறுத்தி கேட்டுக் கொண்டும், பலர் ஒதுங்கிக் கொண்டனர்.
அதனால், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட பெருந்தனக்காரர்களை தேர்வு செய்வது என முடிவெடுத்த பழனிசாமி, கட்சி போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் குறைந்தபட்சம், 10 கோடி ரூபாய் வரை செலவு செய்யக் கூடியவர்களை வேட்பாளராக்கினார்.
வாய்ப்பு
கட்சியில் சேர்ந்து சில நாட்களே ஆனாலும், அவர்களுக்கும் போட்டி யிட வாய்ப்பு அளித்தார்.
ஆனாலும், முன்னாள் அமைச்சர்களும், மா.செ.,க்களும், நிர்வாகிகளும் பழனிசாமியால் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களுக்கு ஆதரவாக களத்தில் வேலை செய்யாமல் ஒதுங்கி இருந்துள்ளனர்; வேலை செய்வது போல போக்கு காட்டியுள்ளனர். அவர்களை தேர்தல் பணியாற்றும்படி கூறி, பழனிசாமி விரட்டி உள்ளார்.
ஒரு கட்டத்தில், அவரே பிரசாரத்தில் களமிறங்கி, தமிழகம் முழுதும் ஒற்றை ஆளாக சுற்றி வந்தார். இந்த விஷயத்தில், அவரது பிரசாரம் கைகொடுத்தது; ஆனாலும், களப்பணி சொதப்பியது.
இதையறிந்ததும், கடைசி நேரத்தில் ஒவ்வொரு மா.செ.,விடமும் போன் போட்டு பேசியதுடன், வாக்காளர்களுக்கு, 'பரிசு'கள் கொடுக்கும்படியும் உத்தரவிட்டுள்ளார். வேட்பாளர்களும் தங்கள் செலவில் ஏற்பாடு செய்யப்பட்ட பரிசுப் பொருட்களை, மா.செ.,க்களிடம் ஒப்படைத்தனர்.
அனைத்து தொகுதிகளுக்கும் பரிசுப் பொருட்கள் போய் சேர்ந்தன. ஆனாலும், பல இடங்களில் அவை முறையாக வாக்காளர்களிடம் சேர்க்கப்படவில்லை.
பழனிசாமி கேட்ட போதெல்லாம், 'எல்லாம் பிரமாதமா ஏற்பாடு செஞ்சாச்சு தலைவரே. நமக்குத்தான் வெற்றி' என, மா.செ.,க்கள் பலரும் கூசாமல் பொய் கூறி உள்ளனர்.
இதனால், தேர்தல் நாளில் பிரச்னையின்றி மா.செ.,க்கள், பூத் ஏஜன்ட்கள் வாயிலாக தேர்தலை எதிர்கொள்ளலாம் என பழனிசாமி நினைத்தார். ஆனால், பூத் ஏஜன்ட்களாக நியமிக்கப் பட்டவர்களில் பலரும் காலை 11:00 மணிக்கே பூத்களில் இருந்து காணாமல் போயுள்ளனர்.
மாலை 4:30 மணிக்கு மேல்தான் மீண்டும் திரும்பி வந்துள்ளனர். இடையில் என்ன நடந்து இருந்தாலும், அவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.
இந்த விபரம் பெரும்பாலான மா.செ.,க்களுக்கு நன்கு தெரிந்திருந்தும், கண்டும் காணாமல் இருந்து விட்டனர். அதனால், பூத் ஏஜன்ட்கள் அனைவரும், தி.மு.க.,விடம் விலைபோய் விட்டனர் என்ற தகவல் பழனிசாமிக்கு வந்துள்ளது.
வடசென்னை மா.செ., வும், முன்னாள் அமைச்சருமான ஜெயகுமார், தன் மகன் போட்டியிட்ட தென்சென்னை தொகுதியில், பல்வேறு பூத்களில் ஏஜன்ட்கள் காணாமல் போனதை ஆதாரங்களுடன் தெரிவித்துள்ளார்.
சோழிங்கநல்லுார், தி.நகர், விருகம்பாக்கம், வேளச்சேரி, மயிலாப்பூர், சைதாப்பேட்டை உள்ளிட்ட ஆறு சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கிய தென்சென்னை லோக்சபா தொகுதிக்குள் அசோக், கந்தன், சத்யா, ரவி உள்ளிட்ட நான்கு மா.செ.,க்கள் உள்ளனர்.
அவர்கள் அனைவர் மீதும் ஜெயகுமார் புகார் கூறியுள்ளார். தன் மகன் தோல்வி அடைந்தால், அதற்கு இந்த நான்கு பேருமே காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.
இதுபோலவே, தமிழகம் முழுதும் பல தொகுதிகளில் இருந்தும் புகார்கள் வந்துள்ளன.
அதனால், கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கும் பழனிசாமி, புகார்களுக்கு ஆளானவர்களிடம் தன் அதிருப்தியை தெரிவித்துள்ளார். தேர்தல் முடிவுகள் வெளியானபின், கடுமையான முடிவு எடுக்கப் போவதாகவும் கூறியுள்ளார்.
எதிர்பார்ப்பு
தேர்தல் முடிவுகளுக்குப் பின், அ.தி.மு.க., கட்டமைப்பில் பெரிய மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, பா.ஜ., விஷயத்தில் தனக்கு ஆலோசனை சொல்வது போல கூறி, கூட்டணியை விட்டு விலகும் முடிவு எடுக்க வைத்தவர்களை, முழுமையாக விலக்கி வைக்க பழனிசாமி முடிவு எடுத்துள்ளார்.
தற்போது சேலம் வீட்டில் தங்கியுள்ள பழனிசாமி, இது தொடர்பான தொடர் ஆலோசனையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
இவ்வாறு அ.தி.மு.க., வட்டாரங்கள் கூறின.
- நமது நிருபர் -

