அதெல்லாம் சினிமா வசனம்; பாயாசம் விஷயத்தில் ப.சி., 'பஞ்ச்'
அதெல்லாம் சினிமா வசனம்; பாயாசம் விஷயத்தில் ப.சி., 'பஞ்ச்'
UPDATED : அக் 29, 2024 05:19 PM
ADDED : அக் 29, 2024 12:29 PM

சென்னை: பாசிசமா, பாயாசமா என்று நடிகர் விஜய் பேசியிருப்பது சினிமா வசனம் போல் உள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
தாம் தொடங்கி உள்ள தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியின் முதல் மாநாட்டை விழுப்புரம் விக்கிரவாண்டி சாலையில் நடிகர் விஜய் அண்மையில் நடத்தினார். கிட்டத்தட்ட 3 லட்சம் பேர் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் உரையாற்றிய நடிகர் விஜய், பாசிசம், பாயாசம் என்றும், குடும்ப கட்சி, திராவிட மாடல் ஆட்சி என தி.மு.க.,வை நேரிடையாகவே விமர்சித்தார். ஆட்சி, அதிகாரத்தில் பங்கு தருவதாகவும், கூட்டணிக்கு வருவோருக்கு ஆசை காட்டும் வகையில் பேசினார்.
தி.மு.க.,வுக்கு எதிரான பேச்சும், அதிகார பகிர்வு என்ற அறிவிப்பும் பெரும்பாலான கட்சிகள் மத்தியில் கலவையான விமர்சனங்களை எழுப்பின. இந்நிலையில் சென்னையில் நிருபர்களை சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம், நடிகர் விஜய் பாசிசமா, பாயாசமா என பேசியது சினிமா வசனம் போல் உள்ளது என்று கூறி உள்ளார்.
நிருபர்களிடம் அவர் கூறியதாவது; நடிகர் விஜய் புதிய கட்சியை தொடங்கி உள்ளார். அவருக்கு என்னுடைய வாழ்த்துகள். புதிய கட்சியின் கோட்பாடாக, ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு என்று கூறி இருக்கிறார். அந்த கட்சி வரக்கூடிய நாட்களில் தமது கொள்கைகளை எல்லாம் சொல்லும் என்று நினைக்கிறேன்.
ஆனால் அவர் காங்கிரசின் சில கொள்கைகளை வலியுறுத்தி, பின்பற்றி பேசி இருப்பது மகிழ்ச்சியை தருகிறது. சில வாசகங்கள் மகிழ்ச்சியை தரவில்லை.(அப்போது நிருபர் ஒருவர் ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்று கூறியதையா என்று கேள்வி எழுப்புகிறார்).அதற்கு பதிலளித்து ப. சிதம்பரம் கூறியதாவது: அவர்(நடிகர் விஜய்) அல்லவா இதை கேட்கணும். சாத்தியமா, சாத்தியம் இல்லையா தேர்தல் தான் முடிவு செய்யும். அதை இப்போது எப்படி சொல்ல முடியும்.
ஒரு காலத்தில் மத்திய அரசில் தனிக்கட்சி தான் ஆட்சி செய்யணும் என்று இருந்தது. ஆனால் இப்போது, மத்திய அரசில் 1996க்கு பிறகு பல கட்சிகள் ஆட்சி செய்துள்ளன. ஆக சாத்தியம் இல்லாதது எல்லாம் ஒரு காலத்தில் சாத்தியம் ஆகலாம். அதை போக போகத்தான் சொல்ல முடியும். பாசிசம், பாயாசம் என்று பேசுவது சினிமா வசனம் மாதிரி தெரிகிறது. சினிமா வசனத்தை எல்லாம் கொள்கையாக எடுத்துக் கொள்ளாதீர்கள். இவ்வாறு ப. சிதம்பரம் கூறி உள்ளார்.

