ஓல்டு டில்லி மார்க்கெட் பகுதிகளில் 'பிங்க் டாய்லெட்' அமைக்க உத்தரவு
ஓல்டு டில்லி மார்க்கெட் பகுதிகளில் 'பிங்க் டாய்லெட்' அமைக்க உத்தரவு
ADDED : செப் 13, 2025 01:04 AM

புதுடில்லி:'ஓல்டு டில்லி மார்க்கெட் பகுதிகளில் முழுவதும் பெண்கள் மட்டுமே பயன்படுத்தக் கூடிய, பிங்க் டாய்லெட்டுகளை எவ்வளவு சீக்கிரம் அமைக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அமைக்க வேண்டும்' என, முதல்வர் ரேகா குப்தா உத்தரவிட்டுள்ளார்.
சாந்தினி சவுக் பகுதியின் பொறுப்பு அமைச்சராக உள்ள டில்லி மாநில முதல்வர் ரேகா குப்தா தலைமையில், சாந்தினி சவுக் லோக்சபா பகுதிகளான ஓல்டு டில்லியில் நிரந்தரமாக நிலவும் பிரச்னைகளுக்கு தீர்வு காண உயர் மட்டக் குழுக் கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்திற்கு, முதல்வர் ரேகா குப்தா தலைமை வகித்தார். சாந் தினி சவுக் எம்.பி., பிரவீன் கண்டேல்வால், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் கவுன்சிலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
அவர்களிடம் பேசிய முதல்வர் ரேகா குப்தா கூறியதாவது:
ஓல்டு டில்லி பகுதிகளில் நிரந்தரமாக நிலவும் போக்குவரத்து பிரச்னைகளுக்கு தீர்வு காண தேவையான நடவடிக்கைகளை அரசு அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். அந்த பகுதியில் நிலவும் ஆக்கிரமிப்பு பிரச்னையை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.
குறிப்பாக, சாந்தினி சவுக், காஷ்மீரே கேட், சதார் பஜார் போன்ற பகுதிகளில் உள்ள வியாபாரிகளை தொடர்பு கொண்டு இந்த பிரச்னைக்கு என்ன தீர்வு காணலாம் என்பதை கேட்டறிய வேண்டும்.
மேலும், முழுதும் பெண்கள் மட்டுமே பயன்படுத்தக் கூடிய சிறப்பு வசதிகளை கொண்ட, 'பிங்க் டாய்லெட்'டுகளை துவக்க தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் அதிகாரிகள் செய்ய வேண்டும்.
அதற்கான புளூபிரின்ட்டுகளை தயாரிக்க வேண்டும். இனிமேலும் எவ்வித தாமதமும் இன்றி, இவற்றை செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.