பழக்க தோஷத்தில் 'பலாப்பழம்' சின்னத்தை மறந்து இரட்டை இலைக்கு ஓட்டு கேட்ட ஓபிஎஸ்
பழக்க தோஷத்தில் 'பலாப்பழம்' சின்னத்தை மறந்து இரட்டை இலைக்கு ஓட்டு கேட்ட ஓபிஎஸ்
UPDATED : ஏப் 03, 2024 11:37 AM
ADDED : ஏப் 03, 2024 10:25 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் தொகுதியில் பா.ஜ., கூட்டணியில் 'பலாப்பழம்' சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இரட்டை இலைக்கு ஓட்டளியுங்கள் என பிரசாரம் செய்தார். பின்னர் பழக்கதோஷத்தில் மாற்றி கூறியதாக சமாளித்தார்.
தமிழகத்தில் லோக்சபா தேர்தலுக்கு இன்னும் 16 நாட்களே உள்ளன. இதனால் வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ராமநாதபுரம் தொகுதியில் பா.ஜ., கூட்டணியில் இடம்பெற்ற முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சுயேட்சையாக போட்டியிடுகிறார். அவருக்கு 'பலாப்பழம்' சின்னம் ஒதுக்கப்பட்டது. இதனையடுத்து அவர் பலாப்பழம் சின்னத்திற்கு ஓட்டளிக்குமாறு பிரசாரம் செய்து வருகிறார்.
இந்த நிலையில், பரமக்குடி அருகே போகலூர், துரத்தியனேந்தல், மஞ்சூர் உள்ளிட்ட கிராமங்களில் பிரசாரம் மேற்கொண்ட ஓபிஎஸ், பொதுமக்களிடம் தனக்கு ஒதுக்கப்பட்ட பலாப்பழம் சின்னத்தை மறந்து விட்டு, 'வெற்றியின் சின்னமாம் இரட்டை இலைக்கு ஓட்டளியுங்கள்' என்று பேசினார்.
இதனால் அவருடன் பிரசார வாகனத்தில் இருந்த ஆதரவாளர்கள் உள்பட அனைவரும் சிரித்தனர். பின்னர் சுதாரித்துக்கொண்ட ஓபிஎஸ், 'பழக்க தோஷத்தில் சொல்லி விட்டேன்' என்று மழுப்பலாக கூறினார்.

