விவசாயிகளின் பிரச்னைகளை முதல்வர் கண்டுகொள்வதில்லை எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி குற்றச்சாட்டு
விவசாயிகளின் பிரச்னைகளை முதல்வர் கண்டுகொள்வதில்லை எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி குற்றச்சாட்டு
UPDATED : பிப் 28, 2024 03:02 AM
ADDED : பிப் 27, 2024 11:55 PM

பெ.நா.பாளையம்: 'விவசாயிகளின் கோரிக்கை, பிரச்னைகளை சட்டசபையில் பேசினால், தி.மு.க.,வைச் சேர்ந்த முதல்வர் ஸ்டாலின் கண்டுகொள்வதில்லை,'' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பேசினார்.
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில், 7.30 கோடி ரூபாயில் கைக்கான்வளவு - வசிஷ்ட நதி இணைப்பு திட்டம் செயல்படுத்தியதற்கு, அதே பகுதியில் வசிஷ்ட நதி பாசன நீர் சங்கம் சார்பில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு பாராட்டு விழா நேற்று நடந்தது.
அதில், பழனிசாமி பேசியதாவது:
அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் மேட்டூர் உபரிநீரை, வசிஷ்ட நதியுடன் இணைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும். தமிழகத்தில், 65 சதவீதம் பேர், விவசாய பணிகளை மேற்கொள்கின்றனர்.
அ.தி.மு.க., ஆட்சியில் மத்திய அரசுடன் இணைந்து, மாவட்டந்தோறும் தலா, 20 கோடி ரூபாயில் காய்கறி விற்பனை மையங்கள் அமைக்கப்பட்டன.
கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டங்களில் பூக்கள் விளைவதால், ஓசூரில் சர்வதேச பூக்கள் ஏல மையம் அமைக்கப்பட்டது. இப்படி பல்வேறு உதவிகள் அ.தி.மு.க., அரசால் விவசாயிகளுக்கு செய்யப்பட்டன.
மேட்டூர் அணையில், 83 ஆண்டுகளுக்கு பின், அ.தி.மு.க., ஆட்சியில் துார் எடுக்கப்பட்டது. அப்போது, 5,000 லோடு வண்டல் மண் எடுக்க, விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இன்று ஏரியில் இருந்து கைப்பிடி மண் கூட எடுக்க முடியாது.
விவசாயிகளின் கஷ்டங்களை அனுபவித்துள்ளேன். விவசாயிகளின் கோரிக்கை, பிரச்னைகளை சட்டசபையில் பேசினால், தி.மு.க.,வை சேர்ந்த முதல்வர் ஸ்டாலின் கண்டுகொள்வதில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.

