
பிப்ரவரி 28, 1927
திருச்சி மாவட்டம், செட்டிபாளையத்தில்,சி.எஸ்.சுந்தரம் கவுண்டர் - காளியம்மாள் தம்பதிக்கு மகளாக, 1927ல் இதே நாளில் பிறந்தவர் சவுந்தரம்.
காங்கிரஸ் பராம்பரியம் மிக்க குடும்பத்தில் பிறந்த இவர், ஒன்பதாம் வகுப்பு வரை படித்தார். தேவாரம், சிலப்பதிகாரம், பெரியபுராணம் உள்ளிட்ட தமிழ் இலக்கியங்களை சிறுவயதிலேயே படித்து, மரபுக் கவிதைகளை எழுதினார்.
வழக்கறிஞர் கைலாசத்தை தன் 15வது வயதில் மணந்து, கவிஞராகவும், ஆன்மிக சொற்பொழிவாளராகவும் வலம் வந்தார். கைலாசம் நீதிபதியான பின்னும், குழந்தைகள் வளர்ந்த பின்னும், இவரின் படைப்புகளை ஊக்குவித்தார். நபிகள் நாயகம் பற்றி, 'அளவற்ற அருளாளர்' எனும் நுாலை இயற்றினார்.
அகில இந்திய வானொலி கவியரங்கங்களில் பங்கேற்றதுடன், பல நுால்களை எழுதி உள்ளார். தமிழ் வளர்ச்சித் துறையின், 'பாவேந்தர் பாரதிதாசன் விருது, பாரதி விருது' உள்ளிட்டவற்றை பெற்றுள்ள இவர், 2010, அக்டோபர் 15ல், தன், 83வது வயதில் மறைந்தார்.
'எழுத்து' இலக்கிய அமைப்பின் சார்பில் வழங்கப்படும், இலக்கிய பரிசால் நினைவுகூரப்படும் எழுத்தாளர் பிறந்த தினம் இன்று!

