
2023, பிப்ரவரி 19
சிறு வயதிலேயே, எம்.ஜி.ஆர்., படங்களால் ஈர்க்கப்பட்டார், மயில்சாமி. நடிகராகும் ஆசையில், சென்னையில் ஹோட்டல் வேலை செய்தார். இயக்குனர் பாக்யராஜிடம், பல குரல் திறமையை வெளிப்படுத்தினார். இவரின், எம்.ஜி.ஆர்., குரல் அவரை கவர்ந்ததால், தாவணி கனவுகள் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பளித்தார்.
தொடர்ந்து, கன்னி ராசி, அபூர்வ சகோதரர்கள், வெற்றி விழா, பணக்காரன் உள்ளிட்ட படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்தார். லஷ்மன் - ஷ்ருதியுடன் இணைந்து, 'சிரிப்போ சிரிப்பு' என்ற, 'காமெடி கேசட்'டை வெளியிட்டு கிராமங்களிலும் புகழடைந்தார். மேடை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்ற இவர், நடிகர் விவேக்குடன் இணைந்து நடித்த, துாள் திரைப்படம் பிரபலமடைந்தது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளர், நடுவர், நடிகர் எனும் திறமைகளை வெளிப்படுத்தினார்.
சிவ பக்தரான இவர், தர்ம காரியங்கள் செய்வதை தன் வழக்கமாக வைத்திருந்தார். 2023, இதே நாளில், சென்னை, கேளம்பாக்கம் மேகநாதேஸ்வரர் கோவிலில் நடந்த சிவராத்திரி பூஜையில் பங்கேற்று, 'டிரம்ஸ்' சிவமணியுடன் இசை நிகழ்ச்சி நடத்திய பின், மாரடைப்பால் மறைந்தார்.
தன்னலமற்ற சேவையால், மக்கள் மனங்களில் வாழும், மயில்சாமி மறைந்த தினம் இன்று!

