
பிப்ரவரி 15, 1973
கேரள மாநிலம், திருவனந்தபுரத்துக்கு அருகில் உள்ள புத்தன்சந்தையில், நாடக நடிகர் டி.எஸ்.கண்ணுசாமி பிள்ளை - சீதையம்மாள் தம்பதிக்கு மகனாக, 1912, ஏப்ரல் 26ல் பிறந்தவர் டி.கே.சண்முகம்.
இவரது தந்தை மதுரையில் நாடகம் நடத்தியதால், இவரும் அங்கேயே பள்ளிப் படிப்பை முடித்தார். பின், சில நாடகங்களில் நடித்தார்.
வெ.சாமிநாத சர்மா எழுதிய, 'பாணபுரத்து வீரன்' நாடகத்தை பிரிட்டிஷ் அரசு தடை செய்த போது, இவர், 'தேசபக்தி' என தலைப்பை மாற்றி, பாரதியின், 'என்று தணியுமிந்த சுதந்திர தாகம்' என்ற பாடலையும் சேர்த்து, நடித்து, சுதந்திர உணர்ச்சியை ஊட்டினார்.
அவ்வையாராக நடித்ததால், 'அவ்வை சண்முகம்' என சிறப்பு பெயர் பெற்றார். 74 நாடகங்களில் நடித்ததுடன், மேனகா திரைப்படத்தில் அறிமுகமாகி, கப்பலோட்டிய தமிழன் வரை பல படங்களில் நடித்தார். பல நுால்களை எழுதிய இவர், 1973ல் தன், 61வது வயதில் இதே நாளில் மறைந்தார்.
தமிழ் நாடக மேடையை அரை நுாற்றாண்டு ஆண்ட, டி.கே.எஸ்., மறைந்த தினம் இன்று!

