ADDED : நவ 11, 2025 06:51 AM

சென்னை : 'ஆம்னி பஸ்களுக்கு கட்டணம், வரி உட்பட அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காண, தனி 'பர்மிட்' வழங்கும் முறையை கொண்டு வர வேண்டும்' என ஆம்னி பஸ் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பழகன் கூறியதாவது:
ஆம்னி பஸ்களின் தேவை அதிகரித்து வரும் நிலையில், சுற்றுலா வாகன திட்டத்தின் கீழ் அவை இயக்கப்பட்டு வருகின்றன.
கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு இயக்கப்படும் ஆம்னி பஸ்களுக்கு, 'நேஷனல் பர்மிட்' இருந்தும், 70 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். இதை கண்டித்து, கேரளாவுக்கு ஆம்னி பஸ்கள் இயக்குவதை நிறுத்தினோம்.
நேற்று முதல், தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, கேரளா, கர்நாடகா இடையே இயக்கப்படும், 600க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்களின் சேவையை நிறுத்தி உள்ளோம்.
ஆம்னி பஸ்களுக்கு தனி 'பர்மிட்' உருவாக்கி, கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும். அப்போது தான் ஆம்னி பஸ்களை தடையின்றி இயக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரை, ஆம்னி பஸ் உரிமையாளர்கள் நேற்று அரியலுாரில் சந்தித்து பேசினர்; ஆனால், முடிவு எட்டப்படவில்லை. இதனால், நேற்று ஆம்னி பஸ்கள் இயக்கப்படவில்லை.
மாநிலங்களுக்கு இடையே ஆம்னி பஸ்களின் சேவை நிறுத்தம் செய்யப்பட்ட போதிலும், தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில், தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு 85, கர்நாடகாவுக்கு 183, ஆந்திராவுக்கு 70 விரைவு சொகுசு பஸ்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன.

