ரேஷன் கார்டில் முகவரி மாற்ற சிலிண்டர் ரசீது கேட்டு அதிகாரிகள் அடம்
ரேஷன் கார்டில் முகவரி மாற்ற சிலிண்டர் ரசீது கேட்டு அதிகாரிகள் அடம்
ADDED : ஆக 22, 2025 12:38 AM
சென்னை:'ரேஷன் கார்டில் முகவரி மாற்றம் செய்ய, ஏதேனும் ஒரு ஆவணம் போதும்' என உணவுத் துறை வெளியிட்ட மக்கள் சாசனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக சமையல் காஸ் சிலிண்டர் ரசீது கேட்டு, அதிகாரிகள் கட்டாயப்படுத்துவதாகவும், அதை சமர்ப்பிக்காவிட்டால், விண்ணப்பத்தை ரத்து செய்வதாகவும் புகார் எழுந்துள்ளது.
தமிழக ரேஷன் கடைகளில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு, உணவுப் பொருட்கள் மானிய விலையில் வழங்கப்படுகின்றன. வீடு மாறி செல்வோர், பொது வினியோக திட்ட இணையதளத்தில் முகவரி மாற்றத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு, புதிய முகவரியை பதிவு செய்து, அந்த முகவரிக்கான ஆதார ஆவணமாக, ஏதேனும் ஒன்றை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
அதை அதிகாரிகள் பரிசீலனை செய்து, முகவரி மாற்றத்துக்கு ஒப்புதல் தந்தனர். தற்போது, முகவரி மாற்றத்துக்கு விண்ணப்பிக்கும் போது, முகவரிக்கான ஆவணமாக, ஆதார் கார்டு உள்ளிட்ட ஏதேனும் ஒரு ஆவணத்தை பதிவேற்றம் செய்தாலும், அதனுடன் அந்த முகவரிக்கு உட்பட்டு, சமையல் காஸ் சிலிண்டர் ரசீது கட்டாயம் கேட்கப்படுகிறது.
இது குறித்து, பாதிக்கப்பட்டவர்கள் கூறியதாவது:
ஒரு முகவரிக்கு உட்பட்ட ரேஷன் கார்டுதாரர், தனக்கு ஒதுக்கிய கடை மட்டுமின்றி, தமிழகம் முழுதும் உள்ள எந்த ரேஷன் கடையிலும் பொருட்கள் வாங்கும் வசதி உள்ளது. பள்ளிகளில் குழந்தையை சேர்ப்பது உள்ளிட்ட காரணங்களால் முகவரி மாறி செல்லும் போது, ரேஷன் கார்டில் முகவரி மாற்றப்படுகிறது.
அதற்கு ஆவணமாக முகவரி மாற்றப்பட்ட, ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஏதேனும் ஒரு ஆவணத்தை சமர்ப்பித்தால், விண்ணப்பத்தை நிராகரித்து விடுகின்றனர்; முகவரிக்கு உட்பட்ட சிலிண்டர் ரசீதை பதிவேற்றம் செய்யுமாறு கூறுகின்றனர்.
உணவுத் துறையின் மக்கள் சாசனத்தில் முகவரி மாற்றத்துக்கு, ஏதேனும் ஒரு ஆவணம் போதும் என தெரிவித்துள்ள நிலையில், ஏன் சமையல் காஸ் சிலிண்டர் ரசீதை கட்டாயம் கேட்கின்றனர்? இந்த ஆவணம் வேண்டும் என்றால், அதை அதிகாரப்பூர்வமாக வெளியிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

