நீர்வளத்துறையின் முக்கிய பதவிகளுக்கு சர்ச்சைக்கு இடையே அதிகாரிகள் நியமனம்
நீர்வளத்துறையின் முக்கிய பதவிகளுக்கு சர்ச்சைக்கு இடையே அதிகாரிகள் நியமனம்
UPDATED : ஜூலை 25, 2025 01:26 AM
ADDED : ஜூலை 24, 2025 10:34 PM

சென்னை:நீர்வளத்துறையின் முக்கிய பதவிகளுக்கு, சர்ச்சைகளுக்கு இடையே அதிகாரிகளை நியமித்து, துறையின் செயலர் ஜெயகாந்தன் உத்தரவிட்டுள்ளார்.
நீர்வளத்துறை வாயிலாக, பல்வேறு மாவட்டங்களில் உள்ள 90 அணைகள், 15,000க்கும் மேற்பட்ட ஏரிகள், பாசன கால்வாய்கள் உள்ளிட்டவை பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதற்காக, முதன்மை தலைமை பொறியாளரின் கீழ், சென்னை, திருச்சி, மதுரை, கோவை மண்டலங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன.
ஒவ்வொரு மண்டலத்திற்கும் தலைமை பொறியாளர் பதவி உருவாக்கப்பட்டு உள்ளது. துறையில் அமைச்சர், செயலருக்கு அடுத்து, முதன்மை தலைமை பொறியாளர், தலைமை பொறியாளர் பதவிகள் முக்கியமானவை யாக உள்ளன.
மாநிலம் முழுதும் அணைகளில் நீர் திறப்பு, பராமரிப்பு, மேம்பாட்டு பணிகளை கண்காணிக்க வேண்டியது இவர்களின் பொறுப்பு. கடந்த மே மாதம், முதன்மை தலைமை பொறியாளர் பதவி காலியானது. அதன்பின், மதுரை மண்டல தலைமை பொறியாளர் ரமேஷ், பொறுப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டார்.
இதைத்தொடர்ந்து, ஜூன் மாதம், திருச்சி மண்டல தலைமை பொறியாளர் பதவி காலியானது. இப்பதவிக்கும் பொறுப்பு அதிகாரி நியமிக்கப்பட்டார். இப்பதவிகளை நிரப்ப, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பரிந்துரைப்படி, செயலர் ஜெயகாந்தன் பட்டியல் தயாரித்தார்.
இதற்கு, பொறியாளர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. முதன்மை தலைமை பொறியாளர் பதவிக்கு தகுதியான சீனியர் அதிகாரி இருக்கும் போது, கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்ட ஜூனியர் அதிகாரி பெயர் பட்டியலில் இருந்தது.
அமலாக்கத்துறை சோதனை, மணல் குவாரி முறைகேடு புகார்களில் சிக்கிய அதிகாரியை, அந்த பதவியில் நியமிக்க இருப்பதாகவும் தகவல் பரவியது.
இதனால், பாதிக்கப்பட்ட அதிகாரிகள், நீதிமன்றத்தை அணுக போவதாக கூறி வந்தனர். பொறியாளர் சங்கங்களும், இவர்களுக்கு ஆதரவாக களமிறங்கின. இதனால், காலி பணியிடங்களை நிரப்புவதில் இழுபறி நீடித்து வந்தது.
இந்நிலையில், அப்பல்லோ மருத்துவமனையில், முதல்வர் ஸ்டாலினை சந்தித்த அமைச்சர் துரைமுருகன், காலி பணியிடங்களை நிரப்புவதற்கு ஒப்புதல் பெற்றதாக கூறப்படுகிறது.
அதன்படி, நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளராக கோபால கிருஷ்ணன், சென்னை மண்டல தலைமை பொறியாளராக பொதுப்பணித்திலகம், திருச்சி மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளராக சிவகுமார், இயக்கம் மற்றும் பராமரிப்பு பிரிவு தலைமை பொறியாளராக தங்கராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
சென்னை மண்டல தலைமை பொறியாளராக இருந்த ஜானகி, மத்திய அரசு உத்தரவுப்படி புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அணைகள் பாதுகாப்பு இயக்கத்தின் தலைமை பொறியாளராக பணியிடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
இதற்கான உத்தரவை, நீர்வளத்துறை செயலர் ஜெயகாந்தன் பிறப்பித்துள்ளார். இதன் வாயிலாக, நீர்வளத் துறையில் இரண்டு மாதங்களாக நிலவி வந்த இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
அதேநேரத்தில், சர்ச்சையில் சிக்கிய அதிகாரி பொதுப்பணித்திலகத்திற்கு உயர் பதவி வழங்கியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதிதாக நியமிக்கப்பட்ட அதிகாரிகள், ஆடி அமாவாசை நாளான நேற்று பதவி ஏற்றுக்கொண்டனர்.

