தொழிற்சங்க கட்டடங்கள் ஆக்கிரமிப்பு; நெடுஞ்சாலைத்துறை 'நோட்டீஸ்'
தொழிற்சங்க கட்டடங்கள் ஆக்கிரமிப்பு; நெடுஞ்சாலைத்துறை 'நோட்டீஸ்'
ADDED : நவ 01, 2024 05:18 AM

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம், தாராபுரம், உடுமலை ரோட்டில், தாராபுரம் அரசு போக்குவரத்து கழக கிளை உள்ளது. இதன் அருகே, அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற ஊழியர்கள் சங்கம், தொழிலாளர் முன்னேற்ற சங்கம், அண்ணா தொழிற்சங்கம் மற்றும் பா.ம.க., தொழிற்சங்கம் ஆகியன கட்டடங்களுடன் அமைந்துள்ளன.
தொழிற்சங்க கட்டடங்கள் அமைந்துள்ள இடம் முற்றிலும் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமானது. நீண்ட காலமாக இந்த கட்டடங்கள் அனைத்தும் ஆக்கிரமிப்பு இடத்தில் செயல்பட்டு வந்தது. இதுகுறித்து, நெடுஞ்சாலைத் துறைக்கு பல தரப்பிலும் புகார் சென்றது.
இதையடுத்து, தாராபுரம் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் சார்பில், இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள அறிவுறுத்தி, அவற்றின் முன்புறம் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
'ஆக்கிரமிப்புகள் ஏழு நாட்களுக்குள் அகற்றப்பட வேண்டும். தவறினால், துறை சார்பில் அவற்றை முழுமையாக அகற்றி, அதற்கான செலவினமும் வசூலிக்கப்படும். ஆக்கிரமிப்பு அகற்றும் போது ஏற்படும் இழப்புகளுக்கு துறை பொறுப்பேற்காது; ஆட்சேபனை ஏதும் இருந்தால், நேரடியாக வந்து தெரிவிக்கலாம்' என, நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

