கோவையில் பிரதமரின் வாகன அணிவகுப்பு பேரணிக்கு அனுமதி வழங்கியது உயர்நீதிமன்றம்
கோவையில் பிரதமரின் வாகன அணிவகுப்பு பேரணிக்கு அனுமதி வழங்கியது உயர்நீதிமன்றம்
UPDATED : மார் 15, 2024 05:31 PM
ADDED : மார் 15, 2024 03:31 PM

சென்னை: கோவையில், பாதுகாப்பு காரணங்களுக்காக பிரதமர் பங்கேற்கும் பிரம்மாண்ட வாகன அணிவகுப்புக்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. இதனை எதிர்த்து பாஜ., சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அணிவகுப்புக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டது.
கோவை, நீலகிரி, பொள்ளாச்சி லோக்சபா தொகுதிகளை மையப்படுத்தி பிரதமர் மோடி, கோவையில் பிரமாண்ட வாகன அணிவகுப்பு நிகழ்ச்சி வரும் 18 ம் தேதி மாலை 4 மணிக்கு துவங்கி 6:00 மணிக்கு நிறைவடையும் வகையில் திட்டமிடப்பட்டு இருந்தது.
கோவை மேட்டுப்பாளையம் சாலை கண்ணப்ப நகர் பிரிவில் இருந்து புறப்படும் பிரதமரின் வாகன அணிவகுப்பு நிகழ்ச்சியில் சாலையின் இருமருங்கிலும் பொது மக்கள், கட்சியினருடன், மாணவர்கள், இன்ஜினியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் என ஏராளமானோர் திரண்டு, மலர்தூவி மரியாதை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இந்நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த வாகன அணிவகுப்பு பேரணிக்கு கோவை போலீசார் அனுமதி வழங்க மறுத்துவிட்டனர்.
இது தொடர்பாக, போலீசார் அளித்த விளக்கம்: பிளஸ் 2 பொதுத்தேர்வு மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளதால், அனுமதி வழங்கப்படவில்லை. பிரதமருக்கு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பயங்கரவாத அமைப்புகளால் அச்சுறுத்தல் உள்ளது.
பொதுக்கூட்ட நிகழ்ச்சி என்றால், அங்கு வரும் ஒவ்வொருவரையும் நுழைவு வாயிலில் சோதனை செய்ய முடியும். ஆனால், சாலையில் 4 கி.மீ., தூரத்திற்கு பேரணி நடக்கும் போது ஒவ்வொரு தனி நபரையும் சோதனை செய்வது கடினம். எந்த கட்சிக்கும் அனுமதி வழங்கப்படுவது இல்லை. இவ்வாறு போலீசார் கூறியுள்ளனர்.
இதனை எதிர்த்து பா.ஜ., தரப்பில் , சென்னை உயர்நீதிமன்றத்தில் கோவை மாவட்ட பா.ஜ.,தலைவர் ரமேஷ்குமார் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை அவசர வழக்காக விசாரிக்கும்படி வலியுறுத்தப்பட்டது.
இதனை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், பிரதமர் பங்கேற்கும் வாகன அணிவகுப்பு பேரணிக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

