30 வகை கனிமங்களை வெட்டி எடுக்க மக்களிடம் கருத்து கேட்க வேண்டியதில்லை : மத்திய அரசு உத்தரவு
30 வகை கனிமங்களை வெட்டி எடுக்க மக்களிடம் கருத்து கேட்க வேண்டியதில்லை : மத்திய அரசு உத்தரவு
UPDATED : செப் 12, 2025 07:03 AM
ADDED : செப் 11, 2025 11:59 PM

சென்னை:தாமிரம், நிக்கல், கிராபைட் உள்ளிட்ட, 30 வகை கனிமங்களை, சுரங்கம் அமைத்து எடுப்பதற்கான திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறும்போது, மக்களிடம் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்த விலக்கு அளித்து, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசின் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் துறை அமைச்சகம், நாட்டில் கிடைக்கும் கனிமங்களை, 'முக்கியமானவை, அணுக் கனிமங்கள்' என, வகைபடுத்தி உள்ளது. இதன் அடிப்படையில், எந்தெந்த பகுதிகளில், என்ன வகை கனிமங்கள் கிடைக்கும் என்பது குறித்த தகவல் தொகுப்பு உருவாக்கப்பட்டு உள்ளது.
இந்த கனிமங்கள் இருக்கும் இடங்களை கண்டுபிடிக்கவும், சுரங்கம் தோண்டி எடுக்கவும் தனியாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கனிமங்கள் எடுப்பதற்கான திட்டங்களை செயல்படுத்த, தனியார் நிறுவனங்கள் முன்வந்துள்ளன.
இந்நிறுவனங்கள், பல்வேறு கட்ட அனுமதிகள் பெற்ற பின் கனிமங்களை வெட்டி எடுக்க, மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை ஒப்புதல் பெற வேண்டும். இதற்கான விண்ணப்பங்கள் அடிப்படையில், சுற்றுச்சூழல் அனுமதி வழங்க வழிகாட்டுதல்கள் வகுக்கப்பட்டுள்ளன.
இதில், லித்தியம், கிராபைட், தாமிரம், கோபால்ட், நிக்கல், டைட்டானியம், பாஸ்பரஸ், பொட்டாஷ், சிலிக்கான், டங்க்ஸ்டன் உள்ளிட்ட, 24 வகை கனிமங்கள், முக்கிய கனிமங்கள் என பட்டியலிடப்பட்டுள்ளன.
இதே போன்று, ஆறு வகை கனிமங்கள், அணுக் கனிமங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதில், முக்கிய கனிமங்கள், அணுக் கனிமங்கள் எடுப்பதில் தனியார் ஈடுபட, 2023ல் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இப்பணியில் ஈடுபடும் தனியார் நிறுவனங்கள், பொது மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்துவது போன்ற நடைமுறைகளை நீக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தன.
இது தொடர்பாக, மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறையின் கூடுதல் இயக்குநர் ராஜிவ் ரஞ்சன் பிறப்பித்துள்ள உத்தரவு:
முக்கிய கனிமங்கள், அணுக் கனிமங்கள் எடுக்கும் தனியார் திட்டங்களுக்கு விரைவாக அனுமதி அளிக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுபோன்ற திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெற, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கை தயாரிக்க வேண்டும்.
இதற்காக, 2016ல் வகுக்கப்பட்ட விதிகளின்படி, திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனம், பொது மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்துவது கட்டாயம் என, விதிகளில் உள்ளது. பல்வேறு தரப்பு கோரிக்கைகள் மற்றும் அரசின் முடிவு அடிப்படையில், இந்த விதியில் இருந்து, 24 வகை முக்கிய கனிமங்கள், 6 வகை அணுக்கனிமங்கள் எடுக்கும் திட்டங்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.