அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் புதிய 'வால்வோ ஏசி' பஸ் சேவை துவக்கம்; இன்று முதல் முன்பதிவு செய்யலாம்
அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் புதிய 'வால்வோ ஏசி' பஸ் சேவை துவக்கம்; இன்று முதல் முன்பதிவு செய்யலாம்
ADDED : டிச 25, 2025 05:48 AM

சென்னை: அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு, 34.30 கோடி ரூபாய் மதிப்பில் வாங்கப்பட்ட, 20 'வால்வோ ஏசி' பஸ்களை, சென்னையில் நேற்று, முதல்வர் ஸ்டாலின் கொடி அசைத்து, துவக்கி வைத்தார்.
சென்னை தீவுத்திடலில் நடந்த விழாவில், அரசு போக்குவரத்துக் கழகத்தின் பொன் விழாவை ஒட்டி, 1.05 லட்சம் ஊழியர்களுக்கு சுவர் கடிகாரங்களை, முதல்வர் பரிசாக வழங்கினார்.
பின், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அளித்த பேட்டி:
அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில், 2-0 அதிநவீன 'மல்டி ஆக்சில் வால்வோ' பஸ் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களால் மட்டும் இத்தகைய பஸ்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், அரசு போக்குவரத்து கழகத்திலும் இவ்வகை பஸ்கள் வாங்கப்பட்டு உள்ளன.
சென்னையில் இருந்து மதுரை, திருநெல்வேலி, திருச்செந்துார், திருப்பூர், பெங்களூரு, கோவை, நாகர்கோவில், திருச்சி ஆகிய வழித்தடங்களில், தலா இரண்டு பஸ்; சேலம், தஞ்சாவூர் வழித்தடத்தில் தலா ஒரு பஸ் இயக்கப்பட உள்ளன.
அதேபோல், கோவையில் இருந்து பெங்களூருக்கு தினசரி இரண்டு பஸ்கள் இயக்கப்படும். ஒரு சிறந்த பயண அனுபவத்தை, இந்த பஸ்கள் தரும்.
இதில் பணிபுரியும் ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கு, பெங்களூரில் உள்ள வால்வோ நிறுவன ஆலையில் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
இப்பஸ்சில் பயணிக்க, இன்று முதல் முன்பதிவு செய்யலாம். கிலோ மீட்டருக்கு, 1.70 ரூபாய் என்ற விகிதத்தில் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னை கிளாம்பாக்கம் நிலையத்தில் இருந்து, இன்று முதல் இயக்கப்படும்.
பெரும்பான்மை ஆம்னி பஸ்கள், கோயம்பேடு நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்றன. நீதிமன்ற காலக்கெடு முடிந்த பின், அந்த பஸ்களும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும்.
சென்னையில் இயக்கப்படும் மின்சார பஸ்களில், ஒப்பந்த ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

