ADDED : டிச 10, 2024 03:00 AM
சென்னை: பொது பயன்பாட்டுக்கான கட்டடங்களுக்கு உரிமம் வழங்கும் சட்டத்தில், திருத்தம் செய்வதற்கான மசோதா, நேற்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.
தமிழகத்தில், பொது கட்டடங்களுக்கு உரிமம் வழங்குவதற்கான சட்டம், 1965ல் நிறைவேற்றப்பட்டது. இதில், தற்போதைய நடைமுறைக்கு ஏற்ப, சில திருத்தங்களை செய்ய, நகராட்சி நிர்வாகத்துறை முடிவு செய்துள்ளது. இதற்கான சட்ட திருத்த மசோதா, சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
இதன்படி, ஒரு கட்டடத்தை பொது கட்டடமாக பயன்படுத்த வேண்டும் என்றால், அதன் உரிமையாளர், முறையாக கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். இதில், கட்டடத்தின் உறுதித் தன்மை குறித்த சான்றிதழை இணைப்பது கட்டாயமாக்கப்படுகிறது
கட்டடத்தை முறையாக ஆய்வு செய்யாமல், உறுதித்தன்மை சான்றிதழ் வழங்கப்பட்டது தெரியவந்தால், சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு, 2 லட்சம் ரூபாய் அபராதம், பதிவு நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்க, இதில் வகை செய்யப்பட்டுள்ளது.
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, இந்த மசோதாவை தாக்கல் செய்தார்.

