கொலையை தடுப்பதில் அலட்சியம் நெல்லை ஏ.சி., செந்தில்குமார் 'சஸ்பெண்ட்'
கொலையை தடுப்பதில் அலட்சியம் நெல்லை ஏ.சி., செந்தில்குமார் 'சஸ்பெண்ட்'
ADDED : மார் 21, 2025 12:27 AM
சென்னை:திருநெல்வேலியில், ஓய்வு பெற்ற போலீஸ் எஸ்.ஐ., ஜாகீர் உசேன் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், உதவி கமிஷனர் செந்தில்குமார், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
திருநெல்வேலி டவுன் ஜாமியா தைக்கா தெருவை சேர்ந்தவர் ஜாகீர் உசேன், 60. இவர், போலீஸ் எஸ்.ஐ.,யாக பணிபுரிந்து, 2009ல், விருப்ப ஓய்வு பெற்றவர். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தனிப்பிரிவு பாதுகாவலர்களில் ஒருவராகவும் பணிபுரிந்து உள்ளார்.
இரு தினங்களுக்கு முன், திருநெல்வேலி டவுன் வழுக்கோடை அருகே, மசூதியில் தொழுகை முடித்து வீடு திரும்பினார். அப்போது, ஜாகிர் உசேனை, நான்கு பேர் அரிவாளால் வெட்டி கொடூரமாக கொன்றனர்.
இதற்கு முன், நில பிரச்னை தொடர்பாக பல முறை ஜாகிர் உசேன், திருநெல்வேலி டவுன் காவல் நிலையத்தில் பலமுறை புகார் அளித்துள்ளார். போலீசார் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்துள்ளனர். இது தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு, 'வீடியோ' ஒன்றையும் ஜாகிர் உசேன் வெளியிட்டார். அதில், என்னை கொலை செய்ய ஒரு கும்பல் சுற்றுகிறது என்றும், அக்கும்பலில் உள்ள நபர்கள் குறித்தும் தெரிவித்து இருந்தார்.
இந்த விவகாரத்தில் அலட்சியமாக இருந்த, திருநெல்வேலி டவுன் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
இதையடுத்து, ஜாகிர் உசேன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக தெரிந்து இருந்தும், மிரட்டல் விடுத்த நபர்களை கைது செய்து சிறையில் அடைக்க தவறிய, உதவி கமிஷனர் செந்தில்குமாரை, 'சஸ்பெண்ட்' செய்து, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

