ADDED : ஜன 02, 2024 06:40 AM
சென்னை : அயலகத் தமிழர்கள் நலன் மற்றும் மறுவாழ்வு துறையின் சார்பில், கடந்தாண்டு முதல், ஜன., 11, 12ம் தேதிகள் அயலகத் தமிழர்கள் தினமாக கொண்டாடப்படுகின்றன. இதன் ஒருபகுதியாக, 'வேர்களைத் தேடி' என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
இதன்படி, வெளிநாடுகளில் வாழும், 18 முதல் 30 வயதுக்குட்பட்ட தமிழர்கள், தமிழக அரசின் செலவில் வரவழைக்கப்பட்டு, தமிழகத்தின் கலை, இலக்கியம், பண்பாடு, வரலாறு உள்ளிட்டவற்றை அறிந்து கொள்ள வழிவகை செய்யப்படுகிறது.
ஆஸ்திரேலியா, கனடா, பிஜி, இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து, 58 இளைஞர்கள், கடந்த மாதம், 27ம் தேதி தமிழகம் வந்தனர். சுற்றுலாத்துறை ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டு, சுற்றுலாத்துறை வாகனம் வாயிலாக பண்பாட்டு பயணத்தை துவக்கினர்.
காஞ்சிபுரம், தஞ்சாவூர் மாவட்டங்களில் உள்ள மன்னர் காலத்து கட்டுமானங்கள், வரலாற்று சிறப்புமிக்க இடங்கள், அங்குள்ள பாரம்பரிய மற்றும் நாட்டுப்புற கலைகளை கண்டு பிரமித்தனர்.
தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு, திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய ஊர்களுக்கும் செல்ல உள்ளனர்.
இவர்கள், வரும் 11, 12ம் தேதிகளில், சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடக்க உள்ள, அயலக தமிழர்கள் தின விழாவில் பங்கேற்று, தங்களின் அனுபவங்களை தெரிவிக்க உள்ளனர். மேலும், இவர்கள் வாழும் நாடுகளில், தமிழர்களின் கலாச்சார துாதுவர்களாகவும் செயல்பட உள்ளனர்.

