இயற்கைதான் என்னை இயக்குகிறது இயக்குநர் பாரதிராஜா பேச்சு
இயற்கைதான் என்னை இயக்குகிறது இயக்குநர் பாரதிராஜா பேச்சு
ADDED : பிப் 18, 2025 04:43 AM

சென்னை : ''இயற்கைதான் என்னை இயக்குகிறது,'' என, இயக்குநர் பாரதிராஜா பேசினார்.
பிரம்ம கான சபா சார்பில், புகைப்படக் கலைஞர் யோகா எழுதிய, 'இயக்குநர் இமயத்துடன் 25 வருட இனிய நினைவுகள்' என்ற நுாலை, இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் வெளியிட, இயக்குநர் பாக்யராஜ் பெற்றுக் கொண்டார்.
நிகழ்வில், காணொளி வாயிலாக இயக்குநர் பாரதிராஜா பேசுகையில், ''நான் காடு, மலை, மேகம் என, என்னை சுற்றியுள்ள இயற்கையை நேசிக்கிறேன். அந்த இயற்கை தான் என்னை கலைஞனாக்குகிறது; என்னை இயக்குகிறது. யோகா போன்றவர்களின் நட்பு என்னை வாழ வைக்கிறது,'' என்றார்.
துணிச்சல்
நுாலை வெளியிட்ட எஸ்.பி.முத்துராமன் பேசியதாவது:
நான் சார்ந்திருக்கும் ஏ.வி.எம்., பிரிவியூ தியேட்டரில், படம் பார்க்க சென்ற பாரதிராஜாவை, அங்கு பணி செய்த ஒருவர் அழைத்து வந்து, வெளியில் விட்டு விட்டார்.
அப்போது, மனதில் வைராக்கியத்துடன் சென்றவர், 16 வயதினிலே வெற்றிப்படத்தை கொடுத்தார். கமலுக்கு கோவணம் கட்டி படம் எடுத்து வெற்றிப்படமாக்க துணிச்சல் வேண்டும். அவரிடம் அது இருந்தது.
அவரது நட்பு சார்ந்த விஷயங்கள், இந்த நுாலில் உள்ளன. அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு உள்ளார்.
அவர் குணமடைந்து, கலைச்சேவை செய்ய வேண்டும். அவரின் உதவியாளராக இருந்த பாக்யராஜ், இயக்குநரான பின், ஏ.வி.எம்., தயாரிப்பில் முந்தானை முடிச்சு படத்தை ஏற்ற போது, கையில் துண்டு சீட்டு கூட இல்லாமல், இரண்டு மணி நேரம் கதை சொன்னார். அந்த படம் மெகா ஹிட் படமானது. அவர் இந்த நுாலை பெற்றது மகிழ்ச்சி.
இவ்வாறு அவர் பேசினார்.
துளிர்த்த கண்ணீர்
ஜவுளி வர்த்தகர் நல்லி குப்புசாமி பேசுகையில், ''இந்த நுாலை, இயக்குநர் பாரதிராஜாவிடம் கொடுத்தபோது, அதைப்பார்த்து, மிகவும் உணர்ச்சி வசப்பட்டார். அவர் கண்ணில் துளிர்த்த கண்ணீர், நட்பை பேசியது,'' என்றார்.
நிகழ்ச்சியில்,திரைப்பட நடிகரும் பத்திரிகையாளருமான சித்ரா லஷ்மணன், பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ், மக்கள் குரல் ராம்ஜி, டாக்டர் ராஜன் உட்பட பலர் வாழ்த்துரை வழங்கினர். யோகா ஏற்புரை நிகழ்த்தினார்.

