'பைப் லைனில்' இயற்கை எரிவாயு 28,000 வீடுகளுக்கு வினியோகம்
'பைப் லைனில்' இயற்கை எரிவாயு 28,000 வீடுகளுக்கு வினியோகம்
ADDED : செப் 14, 2025 03:15 AM

சென்னை:தமிழகத்தில் வீடுகளுக்கு குழாய் வழித்தடத்தில், இயற்கை எரிவாயு வினியோகம் செய்யும் திட்டத்தில், காஸ் வினியோக நிறுவனங்களிடம், இதுவரை, 1 லட்சம் வீடுகள் முன்பதிவு செய்துள்ள நிலையில், 28,000 வீடுகளுக்கு எரிவாயு வினியோகம் துவங்கியுள்ளது.
தமிழகத்தில் குழாய் வழித்தடத்தில் இயற்கை எரிவாயு வினியோகம் செய்ய, திருவள்ளூர் மாவட்டம், எண்ணுார் துறைமுக வளாகத்தில், எல்.என்.ஜி., எனப்படும் திரவ நிலை இயற்கை எரிவாயு முனையத்தை, இந்தியன் ஆயில் நிறுவனம் அமைத்துள்ளது.
வளர்ச்சி நிறுவனம் இதற்கு, வெளிநாடுகளில் இருந்து, கப்பலில் திரவ நிலை இயற்கை எரிவாயு எடுத்து வரப்படுகிறது.
இந்த எரிவாயுவை மாநிலம் முழுதும், 2.30 கோடி வீடுகளுக்கு, பி.என்.ஜி., அதாவது, 'பைப்டு நேச்சுரல் காஸ்' எனப்படும் குழாய் வழித்தடத்தில் இயற்கை எரிவாயுவாகவும்; 2,785 சி.என்.ஜி., மையங்கள் வாயிலாக வாகனங்களுக்கு, சி.என்.ஜி., எனப்படும் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு வாகவும் வினியோகம் செய்யப்பட வேண்டும்.
இந்த பணிகளுக்காக, ஏழு நிறுவனங்களை மத்திய அரசு நியமித்துள்ளது. இத்திட்டத்திற்கான முகமையாக, 'டிட்கோ' எனப்படும் தமிழக தொழி ல் வளர்ச்சி நிறுவனம் செயல்படுகிறது.
வீடுகளுக்கு இயற்கை எரிவாயு வினியோகிக்க, 'பைப் லைன்' அமைக்கும் பணியில், கடந்த 2023ல் இருந்து, காஸ் வினியோக நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.
சென்னையில் அரும்பாக்கம், அண்ணா நகர் உள்ளிட்ட இடங்களிலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் ராஜிவ் காந்தி சாலை உள்ளிட்ட இடங்களிலும், வீடுகளுக்கு பைப் லைனில் எரிவாயு வினியோகம் செய்யும் பணி, கடந்த ஆண்டில் இருந்து துவங்கியது.
28,000 வீடுகள் தற்போதைய நிலவரப்படி மாநிலம் முழுதும், 1 லட்சம் வீடுகள், இயற்கை எரிவாயு பெற, வினியோக நிறுவனங்களிடம் பதிவு செய்துள்ளன.
அதில், 28,000 வீடுகளுக்கு, இயற்கை எரி வாயு வினியோகம் செய்யப் படுகிறது. மேலும், 420 சி.என்.ஜி., மையங்கள் வாயிலாக, வாகனங்களுக்கு சி.என்.ஜி., எரி வாயு வினியோகம் செய்யப் படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.