ரூ.4,000 கோடி செலவாகும் என்பதால் ரேஷனில் 'நாப்கின்' வழங்கப்படாது: தமிழக அரசு
ரூ.4,000 கோடி செலவாகும் என்பதால் ரேஷனில் 'நாப்கின்' வழங்கப்படாது: தமிழக அரசு
ADDED : டிச 17, 2025 06:03 AM

சென்னை: 'ரேஷன் கடைகளில், 'சானிட்டரி நாப்கின்' வழங்கும் திட்டம் ஏதும் அரசிடம் இல்லை' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
ஏழை பெண்கள் பயன் அடையும் வகையில், ரேஷன் கடைகளில், மானிய விலையிலோ அல்லது இலவசமாகவோ, 'சானிட்டரி நாப்கின்' வழங்க உத்தரவிட கோரி, தாம்பரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் லட்சுமி ராஜா என்பவர், பொது நல வழக்கு தொடர்ந்தார் .
இந்த மனு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள் முருகன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, ''4,000 கோடி ரூபாய் வரை செலவாகும் என்பதால், ரேஷன் கடைகளில் நாப்கின் வழங்கும் திட்டம் ஏதும் அரசிடம் இல்லை.
''கிராமப்புற பெண் களுக்கு, கிராம சுகாதார செவிலியர்கள் வாயிலாகவும், பள்ளி மாணவியருக்கும், பிரசவித்த தாய்மார் களுக்கும் இலவசமாகவும் நாப்கின்கள் வழங்கப்பட்டு வருகின்றன,'' என தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், நாப்கின் வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்தும் வகையில், தமிழகத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிக்கும் பெண்கள் எத்தனை பேர் உள்ளனர் என்பது உள்ளிட்ட விபரங்களை வழங்கும்படி, தமிழக அரசு மற்றும் மனுதாரர் தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.

