'சஸ்பெண்ட்' ஊழியர்கள் ஓய்வு பெற நகராட்சி நிர்வாகத்துறை அனுமதி
'சஸ்பெண்ட்' ஊழியர்கள் ஓய்வு பெற நகராட்சி நிர்வாகத்துறை அனுமதி
ADDED : டிச 22, 2025 02:02 AM

சென்னை: 'மாநகராட்சிகளில் ஓய்வு பெறும் நாளில் தற்காலிக பணி நீக்கம் செய்து, பணி நீட்டிப்பு செய்யப்பட்ட ஊழியர்களை ஓய்வு பெற அனுமதிக்கலாம்' என, நகராட்சி நிர்வாகத்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, நகராட்சி நிர்வாக இயக்குநர் மதுசூதன் ரெட்டி, அனைத்து மாநகராட்சி கமிஷனர்களுக்கும் பிறப்பித்துள்ள உத்தரவு:
ஓய்வு பெறும் நாளில், அரசு ஊழியர்களை தற்காலிக பணி நீக்கத்தில் வைக்கும் நடைமுறை தவிர்க்கப்படும் என, சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன் அடிப்படையில், தமிழக அடிப்படை விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த திருத்தத்தை அமல்படுத்தும் வகையில், மாநகராட்சிகளில் ஓய்வு பெறும் நாளில், தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டு, பணி நீட்டிப்பில் உள்ள பணியாளர் விபரங்கள் பெறப்பட்டன. மாநகராட்சி ஆணையர்களே இவர்களுக்கான நியமன அலுவலர் ஆவர்.
எனவே, ஓய்வு பெற அனுமதிக்காமல், தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட பணியாளர்களை, பணி நீக்கத்தில் இருந்து விடுவித்து, அவர்கள் பணியில் இருந்து ஓய்வு பெற அனுமதித்து, மாநகராட்சி ஆணையர்கள் உத்தரவிடலாம்.
இதன்படி, பணி ஓய்வில் அனுமதிக்கும் போது, அதற்கான உத்தரவில் சம்பந்தப்பட்ட பணியாளர்கள் மீது, நிலுவையில் உள்ள குற்றச்சாட்டுகள், லஞ்ச ஒழிப்பு துறையில் நிலுவையில் உள்ள வழக்குகள், துறை ரீதியான நடவடிக்கைகள் இருக்கும் போது, விடுவிக்கக்கூடிய பணப்பயன்கள் குறித்த விபரங்களை குறிப்பிட வேண்டும்.
டிச., 31க்குள் இதற்கான ஆணைகளை பிறப்பித்து, அதன் விபரங்களை துறைக்கு தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறியுள்ளார்.

