sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மோடியின் புனித பயணமும், ஆன்மிக உண்மைகளும்

/

மோடியின் புனித பயணமும், ஆன்மிக உண்மைகளும்

மோடியின் புனித பயணமும், ஆன்மிக உண்மைகளும்

மோடியின் புனித பயணமும், ஆன்மிக உண்மைகளும்


UPDATED : ஜன 23, 2024 04:51 PM

ADDED : ஜன 21, 2024 04:17 AM

Google News

UPDATED : ஜன 23, 2024 04:51 PM ADDED : ஜன 21, 2024 04:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம் நாளை (ஜன.,22) நடக்கிறது. கருவறையில் பகவான் பால ராமர் விக்ரஹத்தை பிரதமர் மோடி பிரதிஷ்டை செய்கிறார். இந்த புனிதமான பணிக்காக, கடந்த 12ம் தேதி கடுமையான விரதத்தை துவங்கினார். மனதையும் உடலையும் முழுமையாக தூய்மைப்படுத்துவதற்கான 11 நாள் விரதம் அது.

எளிய உணவு வகைகளை உட்கொள்வது, தரையில் போர்வை விரித்து படுப்பது, இளநீர் பருகுவது உள்ளிட்ட சாஸ்திரங்களை அவர் விரத நாட்களில் கடைப்பிடிக்கிறார். 11 நாள் விரத காலத்தில் ராமாயணத்துடன் தொடர்புடைய முக்கிய கோவில்களுக்கும், பிரதமர் மோடி ஆன்மிக பயணம் மேற்கொண்டார். அதுபற்றிய விபரம் வருமாறு:

Image 1221764

முதலில் மஹாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் கோதாவரி நதிக்கரையில் உள்ள காலாராம் கோவிலுக்கு சென்றார். கருப்பு நிறத்தில் ராமர் காட்சி தருவதால், காலாராம் கோவில் என, இத்திருத்தலத்துக்கு பெயர் வந்தது.

ராமர், 14 ஆண்டுகள் வனவாசம் செய்தார். 10ம் ஆண்டு வனவாசத்துக்கு பிறகு ராமர் தம்பி லட்சுமணன் மற்றும் துணைவியார் சீதையுடன், நாசிக் அருகே கோதாவரி நதியின் வடக்கு கரையில் இரண்டரை ஆண்டுகள் வாழ்ந்தார். இந்த இடம் பஞ்சவடி என்று அழைக்கப்படுகிறது. காலாராம் கோவிலில், மோடி தரிசனம் செய்ய இதுதான் காரணம்.

Image 1221765

ஜடாயு மோட்சம்


கோதாவரி கரையில் ஜல பூஜை செய்த பிரதமர் மோடி, கோவில் வளாகத்தையும் சுத்தம் செய்தார். அடுத்ததாக, ஆந்திர மாநிலம் அனந்தப்பூர் மாவட்டத்தில் உள்ள லெபாக்ஷி வீரபத்ர சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். அங்கு பக்தர்களுடன் சேர்ந்து ராமர் பஜனை பாடலை பக்தி பரவசத்துடன் பாடினார். ராமாயணம் பற்றிய பொம்மலாட்டத்தையும் பார்த்து லயித்தார். ராமாயணத்தில் புகழ்பெற்ற சம்பவமான ஜடாயு மோட்சம் பெற்ற இடமே இந்த லெபாக்ஷி.

ராவணன் சீதையை கடத்திச் சென்ற போது, சீதையை காப்பாற்ற ஜடாயு முயன்றது; ராவணனை வழிமறித்தது. அப்போது, ஜடாயுவின் இறக்கையை ராவணன் வெட்டி வீழ்த்தி வீட்டு சீதையை கடத்திச் சென்றான் என, ராமாயணத்தில் கூறப்படுகிறது. சீதையை தேடி வந்த ராமர் காயமடைந்த ஜடாயுவை கண்டார். ஜடாயுவை தடவிக் கொடுத்த அவர், பறவையே எழுந்திரு என்று கூறினார்.

Image 1221766

பக் ஷி என்றால் பறவை, லே என்றால் எழுந்திரு என தெலுங்கில் அர்த்தம் வரும். அதுவே லெபாக்ஷி என்றானதாக நம்பிக்கை. சீதையை ராவணன் கடத்திச் சென்றதை ராமரிடம் கூறிவிட்டு ஜடாயு உயிர் விட்டது. அதற்கு அங்கேயே ஈமச் சடங்குகள் செய்த ராமபிரான், அது மோட்சம் பெற அருள் செய்தார். ஜடாயு மோட்சம் அடைந்த தலமே லெபாக்ஷி.

ராமாயண காவியத்தில் லெபாக்ஷிக்கு சிறப்பிடம் உண்டு. அதனால் தான், பிரதமர் மோடி அங்கு சென்று ஜடாயுவின் தியாகத்தை நினைவுகூர்ந்தார். இதையடுத்து, பிரதமர் மோடியின் ஆன்மிக பயணம் கேரளாவில் தொடர்ந்தது. குருவாயூரில் உள்ள கிருஷ்ணர் கோவிலிலும் பிரதமர் மோடி சுவாமி தரிசனம் செய்தார்.

Image 1221767

தென்னக துவாரகா என்று போற்றப்படும், குருவாயூரில் உள்ள மூலவர் ஸ்ரீகுருவாயூரப்பன் திருமேனி பாதாள அஞ்சனம் எனும் உயர் வகை கல்லில் வடிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கத்தை போலவே குருவாயூர் மூலவரும் வைகுந்தத்தில் இருந்து வந்தவர் என்பதால், பூலோக வைகுந்தம் எனப்படுகிறது.அதனாலேயே அயோத்தி ராமர் கோவில் பிரதிஷ்டைக்கு முன், குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் மோடி வழிபட்டுள்ளார்.

திருச்சூரில் உள்ள திருப்ரயார் ராமசாமி கோவிலிலும் பிரதமர் மோடி சுவாமி கும்பிட்டார். இந்த கோவிலில் விஷ்ணுவின் ஏழாவது அவதாரமான ராமர், நான்கு கைகளுடன் காட்சி தருகிறார். சங்கு, சக்ராயுதம், வில் மற்றும் பூச்சரத்தை கைகளில் தாங்கி நிற்கிறார். ராமருக்கு அர்ப்பணிக்கப்பட்ட முக்கிய கோவில்களில், இதுவும் ஒன்று என்பதால், 11 நாள் விரதத்தின் போது அங்கு சென்றார் மோடி.

கதாகாலட்சேபம்


மோடியின் ஆன்மிக பயணத்தில் தமிழக கோவில்கள் முக்கிய அங்கம் வகிக்கின்றன. 108 வைணவ தலங்களில் முதன்மையான தலமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு மோடி நேற்று சென்றார். தெற்கு கோபுர வாசல் வழியாக கோவிலுக்குள் நுழைந்த பிரதமர் மோடி, கருடாழ்வார், மூலவர், தாயார் உள்ளிட்ட முக்கிய சன்னதிகளிலும், சக்கரத்தாழ்வார், பட்டாபிராமர், கோதண்ட ராமர், ராமானுஜர் சன்னதிகளிலும் சுவாமி தரிசனம் செய்தார்.

கோவில் யானை ஆண்டாள், மவுத் ஆர்கன் வாசித்து மோடிக்கு ஆசி வழங்கியது. அதைத் தொடர்ந்து கம்பர் மண்டபத்தில் அமர்ந்து கம்ப ராமாயண கதாகாலட்சேபம் கேட்டார். ராமரின் குலதெய்வமாக கருதப்படுவது ஸ்ரீரங்கம் ரெங்கநாத சுவாமி கோவில்.

அயோத்தியில் ராவணனின் சகோதரன் விபீஷணனுக்கு ராமர் பரிசாக கொடுத்த சிலையே ஸ்ரீரங்கம் கோவிலில் இப்போதும் இருப்பதாக நம்பிக்கை உள்ளது. அயோத்தியுடன் நெருங்கிய தொடர்புடையது என்பதால், ஸ்ரீரங்கம் ரெங்கநாத சுவாமி கோவிலில் பூஜை செய்து பிரதமர் மோடி வழிபட்டார்.

ஸ்ரீரங்கத்தை தொடர்ந்து ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத சுவாமி கோவிலுக்கு பிரதமர் சென்றார். தொன்மைமிக்க ராமநாத சுவாமி கோவில் ராமரால் எழுப்பப்பட்டது என ராமாயணம் கூறுகிறது. ராவணனிடம் இருந்து சீதையை மீட்பதற்காக இலங்கைக்கு செல்லும் வழியில் ராமேஸ்வரத்துக்கு ராமர் விஜயம் செய்தார்.

மணல் லிங்கம்


தனுஷ்கோடி - தலைமன்னார் இடையில் சேது பாலம் கட்டி இலங்கைக்கு சென்ற ராமர், ராவணனை வதம் செய்து சீதையை மீட்டார். ராவணனை கொன்றதால் ஏற்பட்ட தோஷம் நீங்க சிவனை வழிபட வேண்டும் என ராமரிடம் முனிவர்கள் கூறினர். சிவ பூஜைக்குரிய லிங்கத்தை கொண்டு வர அனுமனிடம் கூறிய ராமர், தோஷம் நீங்க ராமேஸ்வரம் கடலில் நீராடி முடித்தார்.

சிவலிங்கம் கொண்டுவர சென்ற அனுமன் நீண்ட நேரமாகியும் திரும்பவில்லை. குறிப்பிட்ட நேரத்திற்குள் வழிபட வேண்டும் என்பதால் கடற்கரை மணலில் சீதையால் பிடிக்கப்பட்ட மணல் லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். தாமதமாக வந்த அனுமன், சிவலிங்க பூஜை முடிந்ததை கண்டு கோபமுற்றார்.

அனுமனை ராமர் சமாதானப்படுத்தினார். தனக்காக அனுமன் கொண்டு வந்த விஸ்வநாதர் லிங்கத்துக்கு பிரதான பூஜைகள் செய்த பிறகே, சீதை மணலில் செய்த ராமநாதர் லிங்கத்துக்கு பூஜை செய்ய வேண்டும் என்று ராமர் கூறினார். ராமரால் பூஜிக்கப்பட்ட இந்த லிங்கமே ராமநாத சுவாமியாகவும், ராமர் ஈஸ்வரனை வணங்கியதாலேயே இத்தலத்துக்கு ராமேஸ்வரம்என்ற பெயர் வந்ததாகவும் தல வரலாறு கூறுகிறது.

பிரதமர் மோடி ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிய பிறகு, ராமநாத சுவாமி கோவில் வளாகத்தில் உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களிலும் புனித நீராடினார். அதன் பிறகு சுவாமி தரிசனம் செய்தார்.

ராமநாத சுவாமி கோவிலில் இரவு வரை பல்வேறு சமய நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மோடி, கோவில் அருகே உள்ள ராமகிருஷ்ண மடத்துக்கு சென்று இரவு தங்கினார். ஞாயிறு காலை 9:00 மணிக்கு தனுஷ்கோடிக்கு மோடி சென்றார். வங்காள விரிகுடாவும், இந்திய பெருங்கடலும் சந்திக்கும் அரிச்சல்முனை கடற்கரையில் புனித நீராடினார்.

இந்த இடத்தில் தான் சீதை, கடல் மணலில் லிங்கம் பிடித்தார். அதே இடத்தில் பிரதமர் மோடி மணல் லிங்கத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்தார். அதைத் தொடர்ந்து தனுஷ்கோடி கோதண்டராமர் கோவிலில் மோடி வழிபட்டார். கோதண்டராமர் கோவிலில் ராமர், இலக்குவன், சீதை ஆகியோர் உற்சவ மூர்த்திகளாக காட்சி தருகின்றனர்.

ராமாயணத்தில் விபீஷணன் தன் சகோதரன் ராவணனிடம், சீதையை கடத்தி வந்தது தவறு என்றான். இந்த விஷயத்தில் ராமருக்கு உதவி செய்ய முடிவெடுத்து ராமரிடம் சரணாகதி அடைந்தான். விபீஷணனை தம்பியாக ஏற்றுக்கொண்ட ராமர், இலங்கையை வெற்றி கொள்ளும் முன்பாகவே, இலங்கை வேந்தனாக விபீஷணனுக்கு பட்டாபிஷேகம் செய்து வைத்தார்.

விபீஷணன் பட்டாபிஷேகம் நடந்த இடத்தில் ராமருக்கு உருவாக்கப்பட்ட கோவில் தான் தனுஷ்கோடி கோதண்டராமர் கோவிலாகும். இக்கோவிலில் ராமபிரானை விபீஷணன் வணங்கியபடி இருக்கிறார். ராமேஸ்வரம் கடற்கரை, 22 புண்ணிய தீர்த்தங்கள், தனுஷ்கோடி கடற்கரையில் இருந்து புனித நீரை கலசங்களில் அயோத்திக்கு மோடி கொண்டு செல்கிறார்.

அந்த புனித நீரைக் கொண்டே அயோத்தி கோவிலில் ராமர் சிலைக்கு அபிஷேகம் செய்யப்படவிருப்பது சிறப்புவாய்ந்த ஐதீகமாக கருதப்படுகிறது. ராமர் தீர்த்தமாடிய தீர்த்தங்களில் பிரதமர் மோடி நீராடியதும், அங்கிருந்து புனித நீரை அயோத்திக்கு கொண்டு செல்வதும், அயோத்திக்கும் ராமேஸ்வரத்துக்குமான ஆன்மிக தொடர்பை வலுப்படுத்தும் வகையில் இருக்கிறது.

பிரதமர் மோடி 11 நாள் விரதமிருந்து ராமர் தொடர்புடைய புண்ணிய தலங்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்த பிறகு, அயோத்தி ராமர் கோவில் பிரதிஷ்டை விழாவில் பங்கேற்பது, நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நன்மை பயக்கும் என ஆன்மிகவாதிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us