ADDED : ஏப் 04, 2024 11:15 PM

சென்னை: பாரதிய ஜனதா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, வரும் 9ம் தேதி சென்னையில், 'ரோடு ஷோ' நடத்தி மக்களிடம் ஓட்டு கேட்கிறார், பிரதமர் மோடி.
சென்னை தியாகராய நகர் பனகல் பார்க் முனையில் இருந்து பாண்டிபஜார் வழியாக தேனாம்பேட்டை சிக்னல் வரை, 2.2 கிலோ மீட்டர் துாரம் திறந்த ஜீப்பில் பிரதமர் செல்கிறார்.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், பாண்டிபஜார் நடைபாதைகள் விசாலமாகி உள்ளதால், இருபுறமும் இரண்டு லட்சம் பேர் திரண்டு நின்று பிரதமரை பார்க்க முடியும் என, பா.ஜ., கட்சி கணக்கிட்டு உள்ளது.
கோவையில் கடந்த மாதம் 18ம் தேதி, மோடியின் ரோடு ேஷா நடந்தது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திறந்த ஜீப்பில், 2.5 கி.மீ., நின்று கொண்டே வந்தார். சாலையின் இருபுறமும் கூடியிருந்த மக்களை நோக்கி கையசைத்தபடியே சென்றார். பாதுகாப்பு அளிப்பது சிரமம் எனக்கூறி, கோவை போலீஸ் முதலில் ரோடு ஷோவுக்கு அனுமதி தரவில்லை. ஐகோர்ட்டில் அவசர வழக்கு தொடர பா.ஜ., விரைந்ததும், போலீஸ் இறங்கி வந்தது.
ஆனால், சென்னையில் மோடி பேரணிக்கு போலீஸ் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. கோவை அனுபவத்தின் அடிப்படையில், சென்னை பேரணிக்கு பெரிய அளவில் கூட்டம் திரட்டிக் காட்ட கட்சி நிர்வாகிகள் முனைப்பு காட்டுகின்றனர்.
தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலினும், அ.தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமியும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பா.ஜ., கூட்டணியில் உள்ள தலைவர்கள் அத்தனை பேரும் வேட்பாளர்களாக நிற்பதால், தங்கள் தொகுதிகளில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையும் கோவையில் போட்டியிடுகிறார். எனினும், கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, அவர் வேகமான பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
அவரை தவிர தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு எதிராக மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பிரசாரம் செய்ய வேறு தலைவர்கள் இல்லை. இந்த பற்றாக்குறையை ஈடுகட்ட பிரதமர் அடுத்தடுத்து தமிழகம் வரும் வகையில், பிரசார திட்டம் தயாராகி உள்ளது.
வேலுாரிலும் ரோடு ஷோ நடக்கிறது. அதை முடித்ததும், மோடி சென்னை வருகிறார். தென்சென்னை வேட்பாளர் தமிழிசை, மத்திய சென்னை வேட்பாளர் வினோஜ் செல்வம், வடசென்னை வேட்பாளர் பால்கனகராஜை ஆதரித்து ரோடு ஷோவில் ஓட்டு சேகரிக்கிறார்.
மேற்கு மாம்பலத்தில் மோடியின் ரோடு ஷோவை நடத்த, தமிழக பா.ஜ., நிர்வாகிகள் விரும்பினர். ஆனால், அது குறுகலான தெருக்கள் உடைய நெரிசலான ஏரியா என்பதால், பிரதமரின் பாதுகாப்பு பிரிவு ஏற்கவில்லை. அதையடுத்து பாண்டிபஜார் தேர்வு செய்யப்பட்டது.
ஷோ 1 சீன் 2
பிரதமரின் ரோடு ஷோவுக்கு பாதை தேர்வு செய்ததில் ஒரு விசேஷம் உண்டு என்கின்றனர் கட்சியினர். பனகல் பார்க் அருகில் ஜி.என்.செட்டி சாலை துவங்கும் இடத்தில் இருந்து பாண்டி பஜாரில் உள்ள பழைய நாகேஷ் தியேட்டர் வரை தென் சென்னை தொகுதி. நாகேஷ் தியேட்டரில் இருந்து தேனாம்பேட்டை சிக்னல் வரை மத்திய சென்னை தொகுதியில் வருகிறது. ஒரே நேரத்தில் இரண்டு தொகுதிகளில் பிரசாரம் செய்த திருப்தி கிடைக்கும் வகையில் பிரதமரின் பேரணிக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

