ஹிந்துக்களை காக்க மோடி தவறிவிட்டார்: அர்ஜுன் சம்பத்
ஹிந்துக்களை காக்க மோடி தவறிவிட்டார்: அர்ஜுன் சம்பத்
ADDED : ஏப் 26, 2025 02:16 AM

கோவை: “ஹிந்துக்களை தாக்கிய பாக்., பயங்கரவாதிகளை வேரறுக்க வேண்டும்,” என ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், ஆவேசமாக பேசினார்.
ஜம்மு - காஷ்மீரில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில், 28 பேர் கொல்லப்பட்டனர். இதேபோல், மேற்கு வங்கத்தில் வக்ப் திருத்தச் சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டம் தீவிரம் அடைந்ததால், ஆறு பேர் கொல்லப்பட்டனர்.
அரசுக்கு தோல்வி
இவ்விரு சம்பவங்களையும் கண்டித்து, ஹிந்து மக்கள் கட்சியினர் நேற்று, கோவை ரயில் நிலையத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்; போலீசார் தடுத்து நிறுத்தினர்.
அதன்பின், அக்கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் அளித்த பேட்டி:
மேற்கு வங்கத்தில் மம்தா அரசு, இஸ்லாமிய பயங்கரவாதிகளுடன் கைகோர்த்து கொண்டு, ஹிந்துக்கள் மீது வன்முறையில் ஈடுபட்டு வருகிறது. ஆறு பேர் அங்கு கொல்லப்பட்டுள்ளனர்; ஹிந்துக்களை குறிவைத்து தாக்குகின்றனர்.
மம்தா அரசு அவர்கள் யாரையும் கைது செய்ய வில்லை. அதனால் மம்தா அரசை, 'டிஸ்மிஸ்' செய்திருக்க வேண்டும்; அதையும் செய்யவில்லை.
இதேபோல் தற்போது, காஷ்மீரில் ஹிந்துக்களா எனக்கேட்டு கேட்டு, அப்பாவிகளை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்று உள்ளனர்.
இந்த விஷயத்தில் மத்திய அரசு, ஹிந்துக்களை காக்கத் தவறி விட்டது. பிரச்னைக்குரிய இடங்களை கண்டறிந்து, அங்கெல்லாம் ராணுவ பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்திருக்க வேண்டும். அதை செய்யாததில் அரசுக்கு தோல்விதான். ஜம்மு - காஷ்மீரை ஆளும் ஒமர் அப்துல்லா, பாகிஸ்தானுக்கு ஆதரவானவர்.
ஒவ்வொரு ஹிந்துவையும் காக்க வேண்டியது, அரசுகளின் கடமை.
இப்படி ஹிந்துக்களை குறிவைத்து கொன்ற பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி, அவர்களை வேரறுக்க வேண்டும். அதை செய்யாமல், சிந்து நதியில் செல்லும் தண்ணீரை நிறுத்துகிறோம் என மோடி அரசு கூறுவதெல்லாம் ஏற்புடையதாக இல்லை.
வேடிக்கை கூடாது
கண் துடைப்புக்காக எதையோ அறிவிக்கின்றனர். பிரதமர் மோடி மீது, ஹிந்துக்கள் வைத்திருக்கும் அதீத நம்பிக்கையை அவர்தான் காப்பாற்ற வேண்டும்.
பாகிஸ்தானின் இத்தகைய செயல்களை, இந்திய அரசு இனியும் வேடிக்கை பார்க்கக்கூடாது. ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரை மீட்க வேண்டும். பயங்கரவாதிகளுக்கும், அவர்களுக்கு துணை இருப்போருக்கும் தக்க பதிலடி கொடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

