மாநில அரசால் மதுவை ஒழிக்க முடியாது அமைச்சர் ரகுபதி திட்டவட்டம்
மாநில அரசால் மதுவை ஒழிக்க முடியாது அமைச்சர் ரகுபதி திட்டவட்டம்
ADDED : அக் 02, 2024 11:39 PM
சென்னை:''மாநில அரசால் மதுவை ஒழிக்க முடியாது; நாடு முழுதும் மதுவிலக்கிற்கு சட்டம் கொண்டு வந்தால் தான் மதுவை ஒழிக்க முடியும்,'' என, சட்டத் துறை அமைச்சர் ரகுபதி கூறினார்.
சென்னை அறிவாலயத்தில், அவர் அளித்த பேட்டி:
மத்திய அரசுக்கும், மாநில அரசுக்குமான உறவை துண்டிக்கும் விதமாக கவர்னரின் செயல்பாடு உள்ளது. அரசியல்வாதி போல கவர்னர் ரவி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்; ராஜ்பவனை அரசியல் பவனாக மாற்றியுள்ளார்.
கவர்னரின் கதாகாலட்சேபம் தமிழகத்தில் எடுபடாது. மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் கவர்னர் இருக்க வேண்டும்.
'ஆன்லைன் ரம்மி' விளையாட்டின் துாதர் போலவும், 'நீட்' தேர்வுக்கு மக்கள் தொடர்பு அதிகாரி போலவும் கவர்னர் ரவி செயல்படுகிறார். சென்னையில் காந்தி மண்டபத்தை சுத்தம் செய்த கவர்னருக்கும், 'கேமராமேன்' கண்களுக்கும் மது பாட்டில் தெரிந்திருக்கிறது.
எல்லா மாநிலங்களும் சேர்ந்தால் தான் மதுவை ஒழிக்க முடியும். தமிழக அரசால் மட்டும் மதுவை ஒழிக்க முடியாது.
தமிழகத்தில் மது இருக்க வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு சிறிதும் கிடையாது. நாடு முழுதும் மதுவிலக்கு சட்டத்தை கொண்டு வந்தால் தான் மதுவை ஒழிக்க முடியும்.
கவர்னர் பதவி விலக வேண்டும் என்பதற்காகத்தான் அவர் மீது குற்றச்சாட்டு தெரிவிக்கிறோம். தமிழகத்தை போல சகோதரத்துவத்தை கடைப்பிடிக்கும் மாநிலம், இந்தியாவில் எங்கும் கிடையாது.
நாடு முழுதும் மதுவிலக்கு கொண்டு வருவதற்கு மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது.
அனைத்து மாநிலங்களிலும் மதுவிலக்கு ஏற்படுத்த, மத்திய அரசு தான் முயற்சி எடுக்க வேண்டும். பாதி கடையை மூடுங்கள்; பாதியை திறங்கள் என்றால், 1 கி.மீ., துாரம் சென்று குடியுங்கள் என்பது தான் அர்த்தம். எனவே, பூரண மதுவிலக்கு என்பது தான் ஒரே தீர்வு.
இவ்வாறு அவர் கூறினார்.

