ADDED : பிப் 27, 2024 11:39 PM
நாடு முழுதும் உள்ள தகுதியான விவசாய குடும்பங்களுக்கு, சாகுபடி நேரத்தில் உதவும் வகையில், பிரதமரின் விவசாய உதவித்தொகை திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் மூன்று தவணைகளாக தலா, 2,000 ரூபாய் வீதம், 6,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.
நடப்பாண்டு, இத்திட்டத்தின் முதல் தவணை நிதியாக, 2,000 ரூபாய், தமிழகத்தில், 20.9 லட்சம் விவசாயிகளின் வங்கி கணக்கில் இன்று விடுவிக்கப்பட உள்ளது.
மத்திய அரசின் ஒருங்கிணைந்த கல்வி திட்டமான, 'சமக்ர சிக் ஷா' இயக்குனரகம் சார்பில், ஒவ்வொரு மாநில அளவில், ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, ஒரே வினாத்தாளில் மதிப்பீட்டு தேர்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆறாம் வகுப்பு முதல், ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, இன்றும், நாளையும் இந்த தேர்வு நடத்தப்படுகிறது. பள்ளிக்கல்வி துறையின் பாடத்திட்ட நிறுவனமான, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், ஒரே வினாத்தாள் தயாரிக்கப்பட்டு, ஆன்லைனில் பள்ளிகளுக்கு அனுப்பப்படுகின்றன.

