நமக்கு வெற்றி ஒளிவீசும்; நம்பிக்கை தரும்: முதல்வர் ஸ்டாலின் ஆங்கில புத்தாண்டு வாழ்த்து
நமக்கு வெற்றி ஒளிவீசும்; நம்பிக்கை தரும்: முதல்வர் ஸ்டாலின் ஆங்கில புத்தாண்டு வாழ்த்து
UPDATED : டிச 31, 2025 09:47 AM
ADDED : டிச 31, 2025 07:13 AM

சென்னை: ஜனநாயகப் போர்க்களத்தில் நிற்கும் நமக்கு வெற்றி ஒளிவீசும் நம்பிக்கை தரும் புத்தாண்டாக மலர்கிறது 2026 என முதல்வர் ஸ்டாலின் ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: உயிரினும் உயிரான அன்பு உடன்பிறப்புகளுக்கும், அனைத்து மக்களுக்கும் எனது உளமார்ந்த இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள். ஒரு கையில் வாளேந்தி உரிமை காத்தும், மறு கையில் கேடயமேந்தி மக்கள் நலன் காத்தும், ஜனநாயகப் போர்க்களத்தில் நிற்கும் நமக்கு வெற்றி ஒளிவீசும் நம்பிக்கை தரும் புத்தாண்டாக மலர்கிறது 2026!
புத்தாண்டுத் தொடக்கம் முதலே சமத்துவம் பொங்கட்டும். தமிழகம் வெல்லட்டும் எனக் கோலமிட்டு திராவிடப்பொங்கல் களைகட்டட்டும். கட்சியினர் நடத்தும் விளையாட்டுப் போட்டிகள், கலை, இலக்கிய நிகழ்வுகள் என மீண்டும் திமுக ஆட்சி அமைவதற்கான தொடக்கமாக இந்த ஆங்கில புத்தாண்டைக் கொண்டாடுவோம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஸ்டாலின் கடிதம்
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, கட்சி தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதம்: திராவிடப் பொங்கல் விழாவுடன் மலரட்டும் புத்தாண்டு 2026. உலக மக்கள் அனைவருமே ஒவ்வொரு புத்தாண்டுப் பிறப்பையும் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கின்றனர். தமிழக மக்களின் நம்பிக்கை மிகுந்த ஆங்கில புத்தாண்டாக 2026ம் ஆண்டு நிச்சயமாக அமையும். பத்தாண்டுகாலம் தமிழ்நாட்டை படுகுழியில் தள்ளிய முந்தைய அதிமுக ஆட்சியின் சீரழிவிலிருந்து, தமிழகத்தை மீட்பதற்கே இந்த ஐந்தாண்டுகள் பெரும்பாடு பட்டிருக்கிறோம்; தமிழகத்தை மீட்டிருக்கிறோம்.
ஜனநாயக உரிமை
நம் மீது தமிழகத்தின் அனைத்துத்தரப்பு மக்களுக்கும் நம்பிக்கை உள்ளது. உரிமையுடன் தங்கள் கோரிக்கைகளை முன்வைக்கிறார்கள். தொடர்ந்து வலியுறுத்துகிறார்கள்.தமிழகத்தின் நிதி உரிமை, வரி உரிமை, சட்ட உரிமை என அனைத்திற்கும் போராடுவது நாம்தான். எல்லாவற்றுக்கும் மேலாக, இந்திய மக்களின் ஜனநாயக உரிமையான வாக்குரிமையைப் பறிக்கும் எஸ்ஐஆர் நடவடிக்கையை எதிர்த்து சட்டரீதியான போராட்டத்தை நடத்துவதும், களத்தில் நின்று ஒவ்வொரு வாக்குச்சாவடிக்குட்பட்ட வாக்காளரின் உரிமையைக் காப்பதும் திமுக மட்டும்தான்.
தமிழர் பண்பாடு
இந்திய ஜனநாயகத்தின் பாதுகாவலனாக திமுக முன்னிற்கிறது. தமிழர் பண்பாட்டைப் போற்றும் வகையில் கீழடியிலும், பொருநையிலும் அருங்காட்சியகம் அமைத்துள்ளோம். பிறக்கின்ற ஆங்கில புத்தாண்டு 2026 - அது, திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைந்திடும் ஆண்டு. இருளில் பிறக்கும் புத்தாண்டை விடியச் செய்யும் உதயசூரியன் போல, தமிழகத்தின் விடியல் வெளிச்சமாக திமுக ஆட்சி தொடர்ந்திடும். அனைவருக்கும் மீண்டும், உங்களில் ஒருவனான என்னுடைய இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

