பா.ம.க., ராமலிங்கம் கொலை வழக்கில் 6 ஆண்டாக தேடப்பட்டவர் கைது
பா.ம.க., ராமலிங்கம் கொலை வழக்கில் 6 ஆண்டாக தேடப்பட்டவர் கைது
ADDED : டிச 17, 2025 06:26 AM

சென்னை; பா.ம.க., பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில், 5 லட்சம் ரூபாய் சன்மானம் அறிவித்து, ஆறு ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த, பி.எப்.ஐ., அமைப்பின் தஞ்சை மாவட்ட முன்னாள் செயலரும், இவருக்கு அடைக்கலம் கொடுத்த நபரும் கைது செய்யப்பட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம், திருபுவனத்தைச் சேர்ந்த, பா.ம.க., பிரமுகர் ராமலிங்கம், 45, ஹிந்துக்கள் மத மாற்றம் செய்யப்பட்டதை தடுத்ததால் கொடூரமாக கொல்லப்பட்டார். இக்கொலை குறித்து, என்.ஐ.ஏ., எனும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
தடை செய்யப்பட்ட, பி.எப்.ஐ., எனும், 'பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா' அமைப்பைச் சேர்ந்த, 18க்கும் மேற்பட்டோர் சதி திட்டம் தீட்டி ராமலிங்கத்தை கொலை செய்திருப்பதை கண்டறிந்தனர்.
இதையடுத்து, தஞ்சாவூர், கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த, 10க்கும் மேற்பட்டோரை கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர்.
மேலும், இந்த கொலை வழக்கில், தஞ்சாவூர் மாவட்டம், திருபுவனத்தைச் சேர்ந்த முகமது அலி ஜின்னா உட்பட, ஆறு பேரை தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்து, தகவல் தெரிவித்தால், ஒருவருக்கு 5 லட்சம் ரூபாய் சன்மானமாக தரப்படும் எனவும் அறிவித்தனர்.
இவர்களில் ஐந்து பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். மேலும், முகமது அலி ஜின்னா, 42, என்பவர் ஆறு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தார்.
இவரை, தமிழக காவல் துறையின், ஏ.டி.எஸ்., எனும் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் உதவியுடன், என்.ஐ.ஏ., அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். இவருக்கு அடைக்கலம் கொடுத்து வந்த அஸ்மத், 33, என்பவரும் சிக்கினார்.

