மத்திய ஜல்ஜீவன் திட்டத்தில் சாதனை தமிழகத்தில் 1 கோடி வீடுகளுக்கு குடிநீர்
மத்திய ஜல்ஜீவன் திட்டத்தில் சாதனை தமிழகத்தில் 1 கோடி வீடுகளுக்கு குடிநீர்
ADDED : பிப் 03, 2024 12:33 AM
சென்னை:மத்திய அரசின் 'ஜல்ஜீவன் மிஷன்' திட்டத்தின் கீழ், தமிழகத்தில் ஒரு கோடி வீடுகளுக்கு, இதுவரை குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது.
மத்திய அரசு, 2019 முதல், ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், 2024ம் ஆண்டிற்குள், கிராமப் பகுதிகளில் அனைத்து வீடுகளுக்கும், தனி குடிநீர் இணைப்பு வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் மட்டும், 1.25 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.
இதற்காக, 18,228 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் நடக்கின்றன.
இத்திட்டத்தில், பல்வேறு மாநிலங்கள் திட்ட இலக்கை அடைய முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. குழாய் இணைப்பு வழங்கப்பட்ட பல மாநிலங்களில், குடிநீர் வினியோகம் இன்னும் துவங்கவில்லை.
தமிழகத்தில் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்ட பகுதிகளில், குடிநீர் வினியோகமும் செய்து சாதனை படைக்கப்பட்டு உள்ளது.
இதை பாராட்டி, 2022ல் தமிழகத்திற்கு மத்திய அரசு விருது வழங்கிகவுரவித்தது.
தற்போது வரை இத்திட்டத்தின் கீழ், ஒரு கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது.
இத்திட்ட இலக்கை அடைவதற்கு இன்னும் அவகாசம் உள்ள நிலையில், நடப்பாண்டு இறுதிக்குள் அனைத்து பணிகளையும் முடிக்க, தமிழக குடிநீர் வடிகால் வாரியம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
வடகிழக்கு பருவ மழையால், பல இடங்களில் ஜல்ஜீவன் மிஷன் திட்ட பணிகளில் பாதிப்பு ஏற்பட்டது.
அதையும் மீறி, மற்ற மாநிலங்களை மிஞ்சும் வகையில் இத்திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்துவருகின்றன.
பருவ மழை ஓய்ந்த நிலையில், பணிகளை விரைவுப்படுத்த, மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

